ADDED : மார் 19, 2026 04:19 AM

விருத்தாசலம்: சட்டசபை தேர்தல் நெருங்கிய நிலையில், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில், 'பிராது' கட்டும் படலம் அதிகரித்துள்ளது.
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுாரில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் வேண்டி பிராது கட்டினால் 3 நாட்கள், 3 வாரங்கள் அல்லது, 3 மாதங்களில் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெப்சி சி.இ.ஓ., வேண்டுதல் நிறைவேறியதும் 1 கோடி ரூபாயில் தங்க கிரீடம் காணிக்கையாக வழங்கினார்.
முன்னாள் முதல்வர் ஜெ.,வுக்கு ஜாமின் கிடைத்ததும், அப்போதைய அமைச்சர் கோகுலஇந்திரா வெள்ளி கட்டிகளை தானமாக வழங்கினார்.
மேலும், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் முதல்வராக வேண்டி, அவரது மனைவி துர்கா வேண்டியதும் குறிப்பிடத்தக்கது.
இதுபோல், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் இங்கு பிராது கட்டி வருகின்றனர். தேர்தல் நெருங்கிய நிலையில், சிட்டிங் எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன், மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டியும், அவருக்கு சீட் கிடைக்கக் கூடாது எனவும் காங்., நிர்வாகிகள் இருவேறு கோஷ்டியாக பிராது கட்டியது குறிப்பிடத்தக்கது.
அதுபோல், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், எம்.எல்.ஏ., சீட் வேண்டி தினந்தோறும் பிராது கட்டி வருவதால், கொளஞ்சியப்பர் கோவிலில் அரசியல் கட்சியினரின் வருகை அதிகரித்துள்ளது.
