ADDED : மே 29, 2026 06:00 AM

கடலுார்: பக்ரீத் பண்டிகையையொட்டி, கடலுாரில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
கடலுார் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், செம்மண்டலம், முதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பக்ரீத் பண்டிகையையொட்டி மசூதிகளில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
மஞ்சக்குப்பம் அஞ்சுமனே நுாரே முகம்மதியா மஸ்ஜித் ஈத்கா மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர். தொழுகைக்குப்பின் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து ஏழைகளுக்கு குர்பானி வழங்கினர்.
அதேபோல, நெல்லிக்குப்பத்தில், நேற்று காலை 7:00 மணிக்கு, இஸ்லாமியர்கள், சின்னதெரு பள்ளிவாசலில் கூடினர்.
அங்கிருந்து நகரத்தின் முக்கிய சாலை வழியே ஊர்வலமாக சென்று கொத்வாபள்ளியில் உள்ள பள்ளிவாசலை அடைந்தனர். அங்கு நடந்த சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்து ஒருவரையொருவர் கட்டி தழுவி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
விருத்தாசலம் விருத்தாசலம் ஆலடி சாலையில் உள்ள நவாப் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் நேற்று காலை 7:00 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது.
முன்னதாக, மாவட்ட ஜமாத் உலமா சபியுல்லா வரவேற்றார். பத்தா சாஹிப் பள்ளிவாசல் தலைவர் இம்தியாஜ் அஹ்மத் சொற்பொழிவு ஆற்றினார்.
இமாம் மஸ்ஜித் அல்நுார் சையத் இப்ராஹிம் சிறப்பு தொழுகை நடத்தினார். காமராஜர் நகர் பள்ளிவாசல் தலைவர் சையத் முஜாஹித் வாழ்த்தி பேசினார்.
இமாம் மக்கா பள்ளிவாசல் தலைவர் சையத் யூசூப் பிரார்த்தனை செய்தார். விழாவில், விருத்தாசலம் நகர அனைத்து பள்ளிவாசல்களை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஒரே இடத்தில் தொழுகை நடத்தினர்.
