ADDED : ஏப் 11, 2025 05:57 AM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் வீட்டில் நிறுத்தியிருந்த பைக்கை திருடியச்சென்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சின்ன பண்டாரங்குப்பம் ரமேஷ் மகன் பிரதீஷ், 22; இவரது ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கை, நேற்று முன்தினம் காலை சாவியுடன் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, பைக் திருடுபோனது தெரிந்தது.
தகவலறிந்த இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் சந்துரு, செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார், ஆலடி சாலையில் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவரை பிடிக்க முயன்றபோது பைக்கை நிறுத்திவிட்டு தப்பியோட முயன்றனர்.
அதில், ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர், திருக்கோவிலுார் அடுத்த சென்னாகுணம் வீரமணி மகன் அருண், 19; என்பதும், தற்போது சென்னை ஸ்ரீபெரும்புதுாரில் தங்கி, நண்பரான அபி, 18; என்பவருடன் சேர்ந்து பைக் திருட்டுகளில் ஈடுபடுவதும் தெரிந்தது.
இது தொடர்பாக, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, அருணை கைது செய்தனர். தப்பியோடிய அபியை தேடி வருகின்றனர்.

