ADDED : மார் 25, 2026 11:05 PM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் அ.தி.மு.க.,கூட்டணியில் பா.ஜ., அ.ம.மு.க.,விற்கு சீட் ஒதுக்கப்படாததால் தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் தே.ஜ.,கூட்டணியில் அ.தி.மு.க., பா.ஜ., பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா., புரட்சி பாரதம், இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.
அதன்படி பா.ஜ.,விற்கு 27, பா.ம.க.,விற்கு 18, அ.ம.மு.க.,விற்கு 11, த.மா.கா.,விற்கு 5, ஐ.ஜே.கே.,விற்கு 2, புரட்சிபாரதம், த.ம.மு.க., ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நேற்று கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் பெயர்ப்பட்டியல் வெளியானது. அதன்படி கடலுார் மாவட்டத்தில் விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில்(தனி) தொகுதிகள் பா.ம.க.விற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
மற்ற கூட்டணி கட்சிளான பா.ஜ., அ.ம.மு.க., த.மா.கா., ஐ.ஜே.கே., உள்ளிட்ட கட்சிகளுக்கு கடலுார் மாவட்டத்தில் தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. அ.ம.மு.க., மற்றும் பா.ஜ.,நிர்வாகிகள் மாவட்டத்தில் ஒரு தொகுதியாவது ஒதுக்கப்படும் என எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், பா.ம.க.,வைத் தவிர வேறு எந்த கட்சிக்கும் சீட் ஒதுக்கப்படவில்லை. இதனால் தொகுதியை எதிர்பார்த்து காத்திருந்த அ.ம.மு.க., பா.ஜ., உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.
