/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., நிர்வாகி மீது பா.ஜ., கவுன்சிலர் குற்றச்சாட்டு: விருதை ஒன்றியக்குழு கூட்டத்தில் பரபரப்பு
/
தி.மு.க., நிர்வாகி மீது பா.ஜ., கவுன்சிலர் குற்றச்சாட்டு: விருதை ஒன்றியக்குழு கூட்டத்தில் பரபரப்பு
தி.மு.க., நிர்வாகி மீது பா.ஜ., கவுன்சிலர் குற்றச்சாட்டு: விருதை ஒன்றியக்குழு கூட்டத்தில் பரபரப்பு
தி.மு.க., நிர்வாகி மீது பா.ஜ., கவுன்சிலர் குற்றச்சாட்டு: விருதை ஒன்றியக்குழு கூட்டத்தில் பரபரப்பு
ADDED : ஜூலை 20, 2024 05:30 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் ஒன்றிய கவுன்சிலர்கள் நிதி பங்கீடு குறித்து சேர்மன் அறையிலேயே 2 மணி நேரம் விவாதித்ததால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் கூட்டம், சேர்மன் மலர் முருகன் தலைமையில் நடந்தது. துணை சேர்மன் பூங்கோதை கொளஞ்சி, பி.டி.ஓ.,க்கள் இப்ராஹிம், மோகனாம்பாள் முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ., சீதாபதி வரவேற்றார்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு;
பா.ஜ., கவுன்சிலர் செந்தில்குமார்: கொசு மருந்து தெளிப்பதாக மாதந்தோறும் பில் வைக்கப்படுகிறது. ஆனால், இதுவரை மருந்து தெளிக்கும் ஊழியரை பார்த்தது இல்லை. ஒன்றிய கவுன்சிலர்களுக்கு நிதி வழங்காமல், இங்கிருந்து 1 கோடி ரூபாய் நிதியை கலெக்டர் பொது நிதிக்கு மாற்றுவதை ஏற்க முடியாது. ஒன்றிய கவுன்சிலர் நிதி பங்கீடு குறித்து எங்கேயோ உள்ள தி.மு.க., ஒன்றிய செயலாளர் தீர்மானிக்கிறார்.
அ.தி.மு.க., ஆனந்தகண்ணன்: டி.மாவிடந்தல் ஏரியில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. அங்குள்ள அடைப்பை சரி செய்து ஏரியில் தண்ணீரை தேக்கி வைத்தால் விவசாய பணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். சிறுவம்பார் துவக்கப் பள்ளியை தரம் உயர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தி.மு.க., சாந்தி மதியழகன்: எம்.பரூர் பள்ளியில் உள்ள பழைய கட்டடத்தை இடித்து அகற்றி, புதிதாக கட்டடம் கட்டித்தர வேண்டும்.
பா.ம.க., சரவணன்: எருமனுார் ஊராட்சியில் புதிதாக கட்டி திறக்கப்படாமல் உள்ள சுகாதார நிலையத்தை திறந்து, மருத்துவர்களை நியமிக்க வேண்டும். எருமனுாரில் குடிநீர், வடிகால் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
இதுபோல், அனைத்து கவுன்சிலர்களும் அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை வைத்தனர். அவற்றை முன்னுரிமை கொடுத்து செய்து தருவதாக சேர்மன் மலர் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் உறுதியளித்தனர். கவுன்சிலர்கள் பச்சமுத்து, குணசேகரன், மலர்கொடி பரமகுரு, செல்வி, தனம், செல்வராசு, பாக்யராஜ், நீலாவதி உட்பட பொறியாளர்கள் பங்கேற்றனர்.
கவுன்சிலர்கள் கூட்டம் காலை 11:00 மணிக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இறுதி கூட்டம் என்பதால் நிதி பங்கீடு குறித்து விவாதித்ததால் சேர்மன் அறையிலேயே 2 மணி நேரம் வீணானது. அதையடுத்து பிற்பகல் 1:00 மணிக்குத்தான் கூட்டம் துவங்கியது.