காலை உணவு திட்ட சுற்றறிக்கை தலைமை ஆசிரியர்கள் அதிருப்தி
காலை உணவு திட்ட சுற்றறிக்கை தலைமை ஆசிரியர்கள் அதிருப்தி
ADDED : செப் 11, 2026 09:02 PM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் காலை உணவு திட்டத்தில் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளை தலைமை ஆசிரியர்கள் தங்களின் சொந்த நிதியில் மேற்கொள்ள வேண்டுமென, சுற்றிக்கை வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கடலுார் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 1,376 பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 56,940 மாணவர்கள் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பயனடைகின்றனர். இந்நிலையில் இத்திட்டத்தை காமராஜர் பெயரில் 8 ம் வகுப்பு வகுப்பு வரை விரிவாக்கம் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டத்தில் உள்ள மேலும், 618 பள்ளிகளை சேர்ந்த 54,964 மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.
இந்நிலையில், கடலுார் மாவட்டத்தில் காலை உணவு திட்டத்தில் புதிதாக பயன்பெற உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, ‘மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
அதில், ‘அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்க விழாவிற்கு முன்பு அனைத்து பள்ளி மையங்களிலும் புதிய பெயர் பலகை வைத்து, அதனை ஜி.பி.எஸ். கேமரா மூலமாக புகைப்படம் எடுத்து வரும் 15ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மேலும், பள்ளிகளில் சமையல் அறை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தங்களின் சொந்த நிதி மூலம் ஏற்படுத்திட வேண்டும். மேலும், மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்க மற்றும் இடைநிலை கல்வி) தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டுமென’, கூறப்பட்டிருந்தது. இந்த சுற்றறிக்கை, தலைமை ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
