/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மங்கலம்பேட்டையில் பஸ் நிலையம் தேவை: நீண்ட கால கோரிக்கை நிறைவேறுமா?
/
மங்கலம்பேட்டையில் பஸ் நிலையம் தேவை: நீண்ட கால கோரிக்கை நிறைவேறுமா?
மங்கலம்பேட்டையில் பஸ் நிலையம் தேவை: நீண்ட கால கோரிக்கை நிறைவேறுமா?
மங்கலம்பேட்டையில் பஸ் நிலையம் தேவை: நீண்ட கால கோரிக்கை நிறைவேறுமா?
ADDED : ஜூலை 02, 2024 05:33 AM

விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலையில், மங்கலம்பேட்டை பேரூராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள 15 வார்டுகளில், 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இங்கு போலீஸ் ஸ்டேஷன், ஆரம்ப சுகாதார நிலையம், சார் பதிவாளர் அலுவலகம், தீயணைப்பு நிலையம், வங்கிகள், பெரு வணிக நிறுவனங்கள், அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.
மங்கலம்பேட்டையை சுற்றியுள்ள கர்நத்தம், காட்டுப்பரூர், மு.அகரம், மாவிடந்தல், சிறுவம்பார், எடச்சித்துார், பிஞ்சனுார், கோணாங்குப்பம், மு.பரூர், மு.பட்டி, மு.புதுார், சின்னப்பரூர், கோவிலானுார், விசலுார், பில்லுார், பள்ளிப்பட்டு உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அன்றாட தேவைக்கு வந்து செல்கின்றனர்.
இவ்வழியாக சென்னை, பெங்களூரு, திருவண்ணாமலை, வேலுார், திருச்சி, தஞ்சாவூர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பஸ், லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்கின்றன. இருப்பினும் பஸ் நிலையம் இல்லாமல், கடைவீதியில் உள்ள பஸ் நிறுத்தத்தை பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், திறந்தவெளியில் பயணிகள் பல மணி நேரம் கால்கடுக்க காத்திருக்க வேண்டியுள்ளது. மழை காலங்களில் அருகிலுள்ள கடைகளில் தஞ்சமடையும் நிலையில் அவதியடைந்து வருகின்றனர். இதனால் மழை காலங்களில் பயணிகள் நனைந்து, ஈர துணியுடன் பயணிக்கும் அவலம் ஏற்படுகிறது.
முதியோர், பள்ளி மாணவர்கள் பஸ் நிலையம் இன்றி மிகுந்த சிரமமடைகின்றனர். மேலும், இயற்கை உபாதைக்கு கழிவறை வசதியின்றி பெண்கள், நீரிழிவு நோயாளிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேலும், குறுகலான சாலையில் எதிரெதிர் திசையில் பஸ், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர முடியாமல் போக்குவரத்து பாதிக்கிறது.
மங்கலம்பேட்டையில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக முறையிட்டும், மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அரசு கண்டுகொள்ளாததால் பயணிகள் பல ஆண்டுகளாக திறந்தவெளியில் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது.
எனவே, மங்கலம்பேட்டையில் கழிவறை, குடிநீர், காத்திருப்பு கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும். இது தொடர்பாக அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று போர்க்கால அடிப்படையில் புதிதாக பஸ் நிலையம் அமைக்க மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.