/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
/
பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : நவ 12, 2024 06:32 AM
கடலுார்: விவசாயிகள் சிறப்பு மற்றும் ரபி பருவத்தில், பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன்பெற கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலுார் மாவட்டத்திலுள்ள விவசாயிகள், நடப்பு சிறப்பு மற்றும் ரபி பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய சொந்த நிலம், குத்தகை நிலம் உள்ளவர்கள் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை ஆகியவற்றைக் கொண்டு, இ-சேவை மையம் வாயிலாக பயிர் காப்பீடு செய்யலாம். இதன் மூலம் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும், பயிர் மகசூல் இழப்பீட்டிலிருந்து விவசாயிகள் தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் பெறும் விவசாயிகள், வேளாண் நகைக்கடன் பெறாத விவசாயிகள் இத்திட்டத்தில் இணையலாம். கட்டணத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், அரசு பொது சேவை மையங்களில் செலுத்தலாம். ஏக்கருக்கு சம்பா நெற்பயிருக்கு ரூ. 548, பருத்திக்கு ரூ. 412, உளுந்திற்கு ரூ. 231 கட்டணம் செலுத்த வேண்டும். வரும் 15ம் தேதி வரையில், காப்பீடு செய்யலாம்.