ADDED : ஜூலை 24, 2026 07:06 AM

சேத்தியாத்தோப்பு:: சேத்தியாத்தோப்பு அருகே வாய்க்கால் முழுவதும் புதர்மண்டி கிடக்கும் சம்புகளை முற்றிலுமாக அகற்றி துார்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேத்தியாத்தோப்பு அருகே மழவராயநல்லுார் விவசாய நிலங்களுக்கு மத்தியில் செல்லும் பாசன வடிகால் வாய்க்கால் முழுவதும் சம்புகள் புதர்மண்டியுள்ளது.
மழைகாலங்களில் ஸ்ரீமுஷ்ணம் பகுதியிலிருந்து வடியும் மழை வெள்ள நீர், முடிகண்டநல்லுார், சாந்திநகர், மழவராயநல்லுார் வயல்வெளி வழியாக செல்லும், வடிகால் பாசன வாய்க்காலில் வந்து குமாரக்குடி அருகே வெள்ளாற்றில் வடிந்து செல்கிறது. இந்த வாய்க் காலில், கடந்தாண்டு ஸ்ரீமுஷ்ணம் பொதுப்பணித்துறை அலுவலக கட்டுப்பாட்டில் பெயரளவில் துார்வாரியுள்ளதால், பாசனத்திற்கு செல்லும் தண்ணீர் தடைப்படுகிறது.
வாய்க்கால் புதர்மண்டி முற்றிலுமாக அடைத்துள்ளதால் மழை வெள்ள நீர் வயல்களில் சூழ்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
துார்வாரிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் சுத்தமாக துார்வாராமல் சென்றதால் சம்புகள் காடாக வளர்ந்தும் வாய்க்கால் முழுதும் மண்துார்ந்தும் உள்ளது.
இந்நிலையில், வாய்க்கால் ஆக்கிரமிப்பால் முற்றிலும் குறுகி உள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து வாய்க்காலை போர்க்கால அடிப்படையில் துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்என கோரிக்கை விடுத்துள்ளனர்.
