தி.மு.க., ஆட்சியில் பல திட்டங்கள் :வேட்பாளர் சரவணன் பேச்சு
தி.மு.க., ஆட்சியில் பல திட்டங்கள் :வேட்பாளர் சரவணன் பேச்சு
ADDED : ஏப் 21, 2026 11:10 PM

பரங்கிப்பேட்டை: புவனகிரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் சரவணன் நேற்று மாலை இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுப்பட்டார். கீழ் புவனகிரியில் இருந்து துவங்கிய, பைக் பேரணி நகரின் முக்கிய வீதியான கடைவீதி, பஸ் நிலையம், சின்ன தேவாங்கர் தெரு, பெரிய தேவாங்கர் தெரு, முத்தாச்சி பிள்ளையார் கோவில் தெரு, ஒரு வழிப்பாதை, பங்களா, பெருமாத்துார் வழியாக புவனகிரி பாலம் வந்தடைந்தது. அங்கு, உதயசூரியன் சின்னத்தில் தனக்கு ஓட்டளிக்கும்படி இறுதி கட்ட பிரசாரத்தில் பேசினார்.
அப்போது வேட்பாளர் சரவணன் பேசியதாவது:
புவனகிரி தொகுதியில் நான் கடந்த, 2016ம் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அப்போது, நான் எதிர்கட்சி எம்.எல்.ஏ., வாக இருந்ததால், மேம்பாட்டு நிதியில் அடிப்படை வசதிகள், திட்டங்களை செயல்படுத்தினேன்.
தற்போது, தி.மு.க., ஆட்சியில் புவனகிரி தொகுதியில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ரூ.132 கோடி மதிப்பில் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட திட்டங்கள் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்படும். புவனகிரி தொகுதியை மேம்படுத்திட எனக்கு உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அவருடன், முன்னாள் எம்.எல்.ஏ., மல்லிகா, ஒன்றிய செயலாளர் மதியழகன், நகர செயலாளர் ஜெயச்சந்திரன், வி.சி.க., மாவட்ட செயலாளர் அரங்க தமிழ்ஒளி, ம.தி.மு.க., மாநில செயற்குழு ரவி, காங்., கிருஷ்ணன், தே.மு.தி.க., தொகுதி பொறுப்பாளர் பானுசந்தர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
