ADDED : ஏப் 22, 2026 06:26 AM
தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் ஓட்டுப்பதிவு நாளில் வாகனங்கள் பயன்படுத்துதல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, வேட்பாளரோ அல்லது அவரை சார்ந்த முகவர் உள்ளிட்ட நபர்கள், வாக்காளர்களை ஓட்டுச்சாவடிகளுக்கு இலவசமாக அழைத்து செல்வதும், வாகனங்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். இது, 'ஊழல் நடைமுறை' ஆகும்.
ஓட்டுப்பதிவு நாளில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் தனிப் பயன்பாட்டிற்காக ஒரு வாகனம், தேர்தல் முகவருக்காக ஒரு வாகனம், கட்சி தொண்டர்களுக்காக ஒரு வாகனம் என, மூன்று வாகனங்களை பயன்படுத்தலாம். அந்த வாகனங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் அனுமதி சீட்டு வழங்கப்படும். அந்த அனுமதி சீட்டை, வாகனத்தில் முன்புற கண்ணாடியில் தெளிவாக ஒட்ட வேண்டும்.
அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பணியாளர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட யாருக்கும் விதிவிலக்கு இல்லை. உரிமையாளர்கள் தங்களது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தும் தனியார் வாகனங்கள் (தேர்தலுடன் தொடர்பில்லாதவை) அனுமதிக்கப்படும். தனியார் வாகனங்களில் உரிமையாளர்கள் அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஓட்டுச்சாவடிக்கு செல்ல அனுமதி உண்டு. ஆனால், ஓட்டுச்சாவடியின் 100 மீட்டர் சுற்றளவில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. மருத்துவமனை வாகனங்கள், ஆம்புலன்ஸ், பால் வாகனங்கள், குடிநீர் டேங்கர்கள், மின்சார அவசர சேவை வாகனங்கள், காவல்துறை மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்கள் அனுமதிக்கப்படும். நிரந்தர வழித்தடங்களில் இயங்கும் பஸ்கள் மற்றும் பிற பொதுப் போக்குவரத்து வாகனங்கள் வழக்கம்போல் இயங்கலாம்.
விமான நிலையம், ரயில் நிலையம், மாநிலங்களுக்கு இடையிலான பஸ் நிலையம், மருத்துவமனை போன்ற தவிர்க்க முடியாத பயணங்களுக்காக டாக்சிகள், ஆட்டோ போன்றவை பயன்படுத்தலாம். உடல்நலக்குறைவுள்ளோர், மாற்றுத்திறனாளிகள், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் தங்கள் பணியிடங்களுக்கு செல்ல பயன்படுத்தும் வாகனங்கள் அனுமதிக்கப்படும். இதில் டாக்சிகள், தனியார் கார்கள், லாரிகள், மின்சார வாகனங்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள், இ-ரிக்ஷாக்கள், இருசக்கர வாகனங்கள், மினி பஸ்கள் உள்ளிட்ட அனைத்து இயந்திர இயக்க வாகனங்களும் அடங்கும். இந்தக் கட்டுப்பாடுகள், ஓட்டுப்பதிவு முடியும் நேரத்திற்கு முன் 24 மணி நேரத்திலிருந்து, ஓட்டுப்பதிவு முடியும் வரை அமலில் இருக்கும்.
இத்தகவலை, மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
-நமது நிருபர்-
