ADDED : செப் 07, 2026 05:06 AM

குள்ளஞ்சாவடி: முந்திரி மரங்களில் தண்டு துளைப்பான் பூச்சியால் பாதிப்பு ஏற்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
குள்ளஞ்சாவடி அருகே சின்னதானங்குப்பம், பெரிய காட்டுசாகை சுற்றுப்பகுதிகளில் முந்திரி விவசாயம் செய்யப்படுகிறது.
கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட 'தானே' புயல் பாதிப்புக்கு பின், முந்திரி விவசாயம் வெகுவாக இந்த பகுதிகளில் குறைந்து விட்டது. இருப்பினும் போர் பாசனம் இல்லாத விவசாயிகள், தொடர்ந்து முந்திரி மரங்களை பராமரித்து வருகின்றனர். இங்குள்ள முந்திரி மரங்களில் தண்டு துளைப்பான் பூச்சி பாதிப்பு ஏற்பட்டு, முந்திரி மரங்கள் பட்டுப் போவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பெரிய காட்டுசாகை விவசாயிகள் கூறியதாவது:
பருவமழை இல்லாமை, கூலி ஆட்கள் பற்றாக்குறை, கொள்முதல் விலையில் அடையும் பெருத்த நஷ்டம், ஆகியவற்றால் முந்திரி விவசாயம் இப்பகுதிகளில் அழியும் நிலையில் உள்ளது. இதில் தண்டு துளைப்பான் பூச்சி பாதிப்பால் முந்திரி மரங்கள் சேதமடைந்து வருகின்றன.
ஒரு மரத்தில் ஏற்படும் தண்டு துளைப்பான் பாதிப்பு பல்வேறு மரங்களுக்கும் பரவுவதால் பாதிப்பிற்குள்ளாகி வருகறோம். வேளாண் அதிகாரிகள் இப்பகுதியை பார்வையிட்டு, முந்திரி விவசாயிகளுக்கு உதவ முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
