/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குழந்தை விற்பனை: வடலுாரில் பெண் கைது
/
குழந்தை விற்பனை: வடலுாரில் பெண் கைது
ADDED : ஏப் 22, 2025 07:44 AM
சிதம்பரம், : வடலுாரில், பெண் குழந்தையை 1லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த, பெண் சித்த மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்த பெண் ஒருவர் பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அவர், வடலுாரில் சித்த மருத்துவராக உள்ள சத்தியா பிரியா என்பவரிடமிருந்து பிறந்து 6 நாட்களே ஆன பெண் குழந்தையை, ரூ. 1 லட்சம் கொடுத்து வாங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கடலூர் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சித்ராவதிக்கு கிடைத்த தகவலின்பேரில், நேரில் சென்று விசாரணை நடத்தினார். அதை உறுதி செய்த அவர் குழந்தையை மீட்டு, கடலூர் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தார்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில், சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, வடலுார் புதுநகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி சத்தியா பிரியா, 65; என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில், வடலுார் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு தகாத உறவால் பெண் குழந்தை பிறந்ததும், அப்பெண்ணிற்கு சட்டவிரோதமாக சத்திய பிரியா பிரசவம் பார்த்ததும், அக்குழந்தையை, சிதம்பரத்தை சேர்ந்த பெண்ணுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.