கட்டுப்பாட்டை இழந்த டாரஸ் லாரி: கடைகளுக்குள் புகுந்ததால் பரபரப்பு
கட்டுப்பாட்டை இழந்த டாரஸ் லாரி: கடைகளுக்குள் புகுந்ததால் பரபரப்பு
ADDED : ஆக 09, 2026 04:04 PM

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டாரஸ் லாரி கடைகளுக்குள் புகுந்ததால் பரபரப்பு நிலவியது.
அரியலுார் மாவட்டம், ஆலத்தியூர் சிமென்ட் ஆலையில் இருந்து சிமென்ட் மூட்டைகளை ஏற்றிய டாரஸ் லாரி ஒன்று
மதியம் 1:45 மணியளவில், கேரளாவிற்கு புறப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த நெருஞ்சிப்பட்டி பொன்ராஜ் மகன் முருகன், 38, என்பவர் ஓட்டி வந்தார்.
பெண்ணாடம் - திட்டக்குடி நெடுஞ்சாலையில், பெ.பொன்னேரி ரயில்வே மேம்பாலத்தில் செல்ல திரும்பும்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பாலத்தின் பக்கவாட்டில் உள்ள கடைகளுக்குள் திடீரென புகுந்தது. அப்போது, கடைகளின் முகப்பு பகுதி, ெஷட்டுகள் சேதமடைந்தன.
மேலும், கடைகளுக்கு முன்புறம் நிறுத்தியிருந்த, 4 பைக்குகள் மீது லாரி ஏறி இறங்கியது. இந்த திடீர் விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. தகவலறிந்த பெண்ணாடம் போலீசார் வந்து, லாரியை மீட்டு, விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
