ரயில்வே கேட்டில் சப்வே அமைக்கும் பணி தடுத்து நிறுத்தம்
ரயில்வே கேட்டில் சப்வே அமைக்கும் பணி தடுத்து நிறுத்தம்
ADDED : மே 10, 2026 04:52 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே ரயில்வே கேட்டில், சப்வே அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் அகல ரயில்வே பாதையில், பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி கிராமத்தில் ரயில்வே கேட் உள்ளது.
இந்த ரயில்வே கேட்டின் வழியாக அரியகோஷ்டி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய நிலங்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், ரயில்வே கேட்டில் சப்வே அமைக்கப்படுவதால் நேற்று முதல் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படும் என போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நேற்று ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் ரயில்வே போலீசார் அரியகோஷ்டி ரயில்வே கேட்டிற்கு வந்து, சப்வே அமைக்க பணி துவக்குவது குறித்து ஆலோசனையில் ஈடுப்பட்டனர். தகவலறிந்த, அரியகோஷ்டி கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து, 'ரயில்வே கேட்டை எடுக்கக்கூடாது. ரயில்வே கேட்டின் வழியாகதான் விவசாய நிலங்களுக்கு சென்று வருகிறோம். கால்நடைகள் மேய்ச்சலுக்கு ரயில்வே கேட்டின் வழியாகதான் சென்று வருகின்றன. சப்வே அமைப்பது குறித்து எங்களிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை. சப்வே அமைத்தால், மழை, வெள்ளக்காலங்களில் கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்து விடும்,' எனக்கூறி பணியை தடுத்து நிறுத்தினர்.
இதனால், அங்கு 'திடீர்' பரபரப்பு ஏற்பட்டது.
சப்வே அமைப்பது குறித்து, வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கலாம் என பரங்கிப்பேட்டை போலீசார் கூறியதால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
