/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதை மருத்துவமனையில் கட்டுமான பணிகள்... ஜரூர்; பார்வையாளர்களுக்கு வசதிகள் செய்து தர கோரிக்கை
/
விருதை மருத்துவமனையில் கட்டுமான பணிகள்... ஜரூர்; பார்வையாளர்களுக்கு வசதிகள் செய்து தர கோரிக்கை
விருதை மருத்துவமனையில் கட்டுமான பணிகள்... ஜரூர்; பார்வையாளர்களுக்கு வசதிகள் செய்து தர கோரிக்கை
விருதை மருத்துவமனையில் கட்டுமான பணிகள்... ஜரூர்; பார்வையாளர்களுக்கு வசதிகள் செய்து தர கோரிக்கை
ADDED : ஆக 08, 2024 01:42 AM

விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் பொது மருத்துவம், மகப்பேறு, காது, மூக்கு தொண்டை, பல், கண், சித்தா உள்ளிட்ட பிரிவுகளில் தினசரி 2,000 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். மகப்பேறு, பச்சிளம் குழந்தை பராமரிப்பு, அவசர சிகிச்சை, முடநீக்கியல் பிரிவுகளில் 200க்கும் மேற்பட்டேர் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.
இங்கு, 1.80 கோடி ரூபாயில் அதிநவீன சிடி ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே, இ.சி.ஜி., மற்றும் டயாலிசிஸ் இயந்திரங்கள் மூலம் சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தம் சுத்திகரிப்பு, சிறுநீர், ரத்த பரிசோதனை வசதிகள் உள்ளது.
மேலும், தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகிறது.
டாக்டர்கள், செவிலியர்களுக்கு உறுதுணையாக சுமீட் என்ற தனியார் நிறுவன பணியாளர்கள் மூலம் பாதுகாப்பு மற்றும் துப்புரவு பணி மேற்கொள்ளப்படுவதால், மருத்துவமனை வளாகம் துாய்மையாக பராமரிக்கப்படுகிறது. இருப்பினும் கூடுதல் கட்டட வசதியின்றி நோயாளிகள், மருத்துவ ஊழியர்கள் சிரமமடைந்தனர். இதனை சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.
அதைத் தொடர்ந்து, ஓராண்டுக்கு முன் 1.50 கோடி ரூபாயில் கண் மருத்துவ பிரிவுக்கு கூடுதலாக புதிய கட்டடம் கட்டப்பட்டது.
தொடர்ந்து, உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் 5 கோடி ரூபாய் நிதியில், லிப்ட் வசதியுடன் ஐந்து அடுக்குமாடி கட்டடம் கட்டும் பணி துவங்கியுள்ளது. இதில், பார்க்கிங், டயாலிசிஸ், முடநீக்கியல் பிரிவில் அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு வார்டு, அறுவை அரங்குகள், ரத்த வங்கி ஆகியன செயல்பட உள்ளன.
மேலும், தமிழ்நாடு அரசு கனிம வள நிதியின் கீழ் 4.4 கோடி ரூபாயில், ஏற்கனவே உள்ள 24 மணி நேர அவசர சிகிச்சை கட்டடத்தின் மேல் பகுதியில் ஒரு தளமும், அதனருகே உள்ள தீவிர இருதய சிகிச்சை பிரிவு கட்டடத்தின் மேல்புறம் இரண்டு தளங்களும் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் முழுமை பெற்றதும், அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு பிரிவுகள் கொண்டு வரப்பட உள்ளன.
இதனால் 400 முதல் 500 நோயாளிகள் வரை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு நிகராக தங்கி சிகிச்சை பெற முடியும்.
மருத்துவமனைக்கு போதிய இட வசதியின்றி குறுகிய இடத்தில், அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதால் நோயாளிகளுக்கு உதவியாக இருக்கம் பார்வையாளர்கள் காத்திருக்க முடியாமல் தவிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. காலை 7:00 மணி முதல் வெளி நோயாளிகளும், அதன்பின் நோயாளிகளின் பார்வையாளர்களும் அமர இடவசதியின்றி ஆங்காங்கே கால்கடுக்க காத்திருக்கும் அவலம் தொடர்கிறது.
மேலும், உள் நோயாளிகளுடன் தங்கும் பார்வையாளர்கள், மருத்துவர் வருகையின் போது வார்டை விட்டு வெளியேற்றப்படுவது வழக்கம். அப்போது, கொளுத்தும் வெயிலில் நிற்க கூட இடமின்றி முதியோர், கைக்குழந்தைகளுடன் பெண்கள் தவிக்கின்றனர்.
இதை தவிர்க்கும் வகையில், மருத்துவமனை வளாகத்தில் உள்ள மகப்பேறு வார்டுக்கும், ஆண்கள் உள் நோயாளிகள் வார்டுக்கும் இடையே உள்ள காலியிடத்தை காத்திருப்போர் கூடமாக மாற்றலாம். இதற்காக இரண்டு கட்டடத்தின் மேல்புறம் ெஷட் அமைத்து, இருக்கை வசதியை ஏற்படுத்தித் தரலாம்.
இது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளின் உறவினர்கள், பார்வையாளர்கள் காத்திருக்கும் வகையில் இட வசதி ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.