/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விழுப்புரம் - நாகை நான்கு வழிச் சாலையில் கடலுார் அருகே விரிசல் : சீரமைப்பு பணி தீவிரம்
/
விழுப்புரம் - நாகை நான்கு வழிச் சாலையில் கடலுார் அருகே விரிசல் : சீரமைப்பு பணி தீவிரம்
விழுப்புரம் - நாகை நான்கு வழிச் சாலையில் கடலுார் அருகே விரிசல் : சீரமைப்பு பணி தீவிரம்
விழுப்புரம் - நாகை நான்கு வழிச் சாலையில் கடலுார் அருகே விரிசல் : சீரமைப்பு பணி தீவிரம்
ADDED : டிச 15, 2024 06:05 AM

கடலுார் : விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில், கடலுார் முதுநகர் அருகே பாலம் உள்ளிட்ட பல இடங்களில் கான்கிரீட் தளம் விரிசல் ஏற்பட்டுள்ளதால், சீரமைப்பு பணி நடந்து வருகிறது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே 194 கி.மீ., துாரத்துக்கு நான்கு வழி சாலை அமைக்கும் பணி, 6,431 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. விழுப்புரம், புதுச்சேரி, கடலுார் வழியாக, 134 கிராமங்களை கடந்து நாகையை அடையும் இச்சாலை முழுவதும் சிமென்ட் சாலையாக அமைக்கப்பட்டுள்ளது.
கடலுார்-சிதம்பரம் வரை சாலைப்பணி முடிவடைந்து, சோதனை ஓட்டமாக வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. வரும் 24ம் தேதி முதல் முழு பயன்பாட்டிற்கு வர உள்ளது.
இந்நிலையில், கடலுார் முதுநகர், கூத்தப்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் சிமென்ட் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விரிசலை ராட்சத இயந்திரம் மூலம் வெட்டி அகற்றி, மீண்டும் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
சாலை தடிமன் முழுவதும் விரிசல் ஏற்படும் நிலையில், மேலோட்டமாக செய்யப்படும் பேட்ஜ் ஒர்க் மூலம் பாலம் முழு உறுதித்தன்மையோடு இருக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
மேலும், சாலை மேடு பள்ளங்களாக அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்களில் பயணிக்கும்போது அதிர்வு அதிகமாக உள்ளதாகவும், குறிப்பாக, கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது அதிகப்படியான துள்ளல் இருப்பதாக வாகன ஓட்டிகள் புகார் கூறுகின்றனர்.
பணி முடிந்து முழு பயன்பாட்டுக்கு திறக்கும் முன்பாகவே சாலை, மேம்பாலம் என பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு, பேட்ஜ் ஒர்க் நடப்பதால், அதன் உறுதி தன்மை குறித்து பொதுமக்களிடையே கேள்வி எழுப்பியுள்ளது.