/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டெல்டாவில் பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு
/
டெல்டாவில் பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு
ADDED : டிச 15, 2024 07:18 AM

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதியில் வெள்ள பாதிப்புகளை அமைச்சர் பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.
காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதியில் கனமழை பெய்த நிலையில், வீராணம் ஏரியில் இருந்து வெள்ளியங்கால் ஓடையில் 23,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது.
பாதிக்கப்பட்ட பகுதிகளான குமராட்சி, திருநாரையூர், கொளக்குடி உள்ளிட்ட பகுதியை வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று பார்வையிட்டார். வீராணம் ஏரியை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
வீராணம் ஏரி நிரம்பிய நிலையில், பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், காட்டுமன்னார்கோவில் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
வீராணம் ஏரியில் இருந்து கலுங்கு மதகு வழியாக முதல் முறையாக 18,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதியில் 46 கிராமங்களுக்கு மேல் தண்ணீர் புகுந்துள்ளது. பாதிக்கப்பட்ட கிராமங்களில் இருந்து 385 குடும்பங்களை மீட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகள் செய்யப்படுகிறது.
இதுவரை, தமிழகத்தில் மழையால் 8 லட்சத்து 98 ஆயிரத்து 295 ஏக்கர் நெல், வாழை, மணிலா, சோளம், சவுக்கு போன்றவை சாகுபடி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. டெல்டா பகுதியில் கடந்த மூன்று நாட்களில் பெய்த மழையால் காட்டுமன்னார்கோவில், குமராட்சி, கீரப்பாளையம் பகுதியில் சம்பா நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்த பகுதிகளில் தண்ணீர் வடிந்ததும் வேளாண் துறை மூலம் பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு செய்யப்படும் என, அமைச்சர் தெரிவித்தார்.