sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நுாற்றாண்டை கடந்த கடலுார் ஜெயலட்சுமி கமிட்டி துவக்கப் பள்ளி

/

நுாற்றாண்டை கடந்த கடலுார் ஜெயலட்சுமி கமிட்டி துவக்கப் பள்ளி

நுாற்றாண்டை கடந்த கடலுார் ஜெயலட்சுமி கமிட்டி துவக்கப் பள்ளி

நுாற்றாண்டை கடந்த கடலுார் ஜெயலட்சுமி கமிட்டி துவக்கப் பள்ளி


ADDED : ஜூலை 13, 2025 12:10 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 12:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் ஒன்றியத்திற்கு பெருமை சேர்க்கும் பள்ளியாக மஞ்சக்குப்பம், நேதாஜி சாலையில் உள்ள ஜெயலட்சுமி கமிட்டி அரசு உதவிப் பெறும் துவக்கப்பள்ளி உள்ளது. கடந்த 1922ம் ஆண்டு துவங்கப்பட்டு, நுாற்றாண்டைக் கடந்த இப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்றுள்ளனர்.

பள்ளியில் தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர், உதவியாளர், துப்புரவு பணியாளர்கள் என, 15 பேர் பணிபுரிகின்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம் வரலாற்று சின்னமாக கம்பீரமாய், ஏழை எளிய மாணவர்களுக்கு அறிவுக்கண் திறக்கும் ஊன்றுகோலாய் காட்சி அளிக்கிறது.

பள்ளியில் காற்றோட்டமான வகுப்பறை, மின்வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, மின்மோட்டார், நவீன கழிவறை வசதி உள்ளது.

எழுத்தாளர் ஜெயகாந்தன், முரளிதர சுவாமிகள், தாசில்தார் விஜய் ஆனந்த் இப்பள்ளியில் பயின்றவர்கள். இங்கு பயின்ற முன்னாள் மாணவர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் உயர் பதவிகளில் பணிபுரிகின்றனர்.

சிறப்பு வகுப்புகள்


பள்ளியில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும், சாய்ராம் குழுவினரால் பஜனை வகுப்புகள் நடக்கிறது. ஆண்டு முடிவில் மாணவர்களுக்கு அது தொடர்பான போட்டிகள் நடத்தி சாய்ராம் குழுவினரால் அனைத்து மாணவர்களுக்கும் பரிசு வழங்கப்படுகிறது.

வியாழன் தோறும் ஆங்கில புலமை பெற்ற ஆசிரியை பானுமதி மேற்பார்வையில் 'ஸ்டோரி டெல்லிங்' வகுப்புகளும், ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளும் நடக்கிறது.

யோகா மாஸ்டர் சக்தி விஜய் வாரந்தோறும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார். மாணவர்களின் பிறந்த நாளன்று வாழ்த்துப்பாடலுடன், பள்ளித் தாளாளர் பரிசு வழங்கி பாராட்டுவது வழக்கம்.

பள்ளி நிகழ்வுகள்


அரசு வழங்கும் நலத்திட்டங்கள் மட்டுமன்றி பாரம்பரிய சீருடையான பச்சை, வெள்ளை வண்ணத்தில் சீருடை, பெல்ட், ரிப்பன், பேக் வழங்கப்படுகிறது.

மாணவர்களின் உடல் நலன், கல்வி நலனில் பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் அக்கறையோடு பணிபுரிகின்றனர்.

பள்ளி விழாக்கள்


பள்ளியில் ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து மத நல்லிணக்க விழாக்கள் கொண்டாடப்படுகிறது. ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கல், மாசி மகம், ரம்ஜான் பண்டிகை, தமிழ்ப்புத்தாண்டு போன்ற விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்படும்.

ஆசிரியர்கள் வழிகாட்டி


பள்ளி தாளாளர் கமலலட்சுமி கூறியதாவது:

கோடை விடுமுறையில் பெற்றோரை நேரில் சந்தித்து, மாணவர்கள் பாதுகாப்பை வலியுறுத்துகிறோம். ஆண்டு தோறும் ஜூன் மாதத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது. பாரம்பரிய முறைப்படி மாணவர் சேர்க்கை நடக்கிறது.

முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஆசிரியர்கள் காலை 8:00 மணிக்கு வருகை தந்து மாணவர்களை வழிநடத்துவர்.

இப்பள்ளி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளதால், மாணவ, மாணவிகள் சாலையை கடக்கவும், உரிய பஸ்களில் ஏறி இறங்கவும் ஆசிரியர்கள் வழிகாட்டியாக உள்ளனர்.

கைத்தறி நெசவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் வியாழன் தோறும் அனைத்து ஆசிரியர்களும், கைத்தறி சேலைகள் அணிந்து வருகின்றனர்.

காலை வழிபாட்டுக்கூட்டத்தில் செய்தி, திருக்குறள், பழமொழிகள், சிந்தனை தொடர்பாக ஆசிரியர்கள் அறிவுரை வழங்குவர். ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கண் திறந்து, வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டு, வீரநடை போடுவதே லட்சியம்.

தரம் உயர்த்த வேண்டும்


கடலுார் மாநகராட்சி 11வது வார்டு கவுன்சிலர் அருள்பாபு கூறிய தாவது:

எல்.கே.ஜி., முதல் இரண்டாம் வகுப்பு வரை இங்குதான் படித்தேன். கல்வியோடு ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுத்த பள்ளி. பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியைகள் அழகுராணி, கிரிஜா தங்கள் பிள்ளைகள் போல அன்பு செலுத்தினர்.

என்னுடன் படித்த மாணவர்களில் இரண்டு பேர் தாசில்தாராக உள்ளனர். நான் சிவில் என்ஜினியருக்கு படித்த பின், மக்கள் பணி செய்வதற்காக தேர்தலில் போட்டியிட்டு மாநகராட்சி கவுன்சிலராக உள்ளேன். பள்ளியின் நுாற்றாண்டு விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்ததில் மகிழ்ச்சி.

இப்பள்ளிக்கு காலை உணவு திட்டத்தையும் கொண்டு வர தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன். பழமையான இப்பள்ளியை குறைந்தபட்சம் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.

கல்வி பயில உத்வேகம்


சென்னை தலைமை செயலக ஊழியர் அருணாதேவி கூறியதாவது:

இங்கு, ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். நான் ஒரு மாற்றுத்திறனாளி. அதனால் ஆசிரியர்கள் என் மீது கூடுதல் கவனம் செலுத்தி, கல்வி பயில்வதற்கு உத்வேகம் அளித்தனர். எங்கள் பள்ளியில் அப்போதைய தலைமை ஆசிரியர் பாஸ்கர் உட்பட அனைவருமே அற்புதமாக பாடங்களை புரியும்படி கற்றுக் கொடுத்தனர்.

நேரத்தை முறையாக கடைபிடிக்க கற்றுக் கொடுத்தனர். தற்போது தலைமை செயலகத்தில் நிதித்துறை உதவி பிரிவு அலுவலராக பணிபுரிகிறேன். வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவதற்கு எனது பள்ளியும், ஆசிரியர்களும் ஒரு முக்கிய காரணம்.

இனிமை காலம்


மாநில அரசு தணிக்கை துறை உதவி ஆய்வாளர் பூங்குழலி கூறியதாவது:

கடந்த 1989ம் ஆண்டு முதல் 1994ம் ஆண்டு வரை இப்பள்ளியில் படித்தேன். மாணவர்கள் மீது ஆசிரியர்கள் அக்கறை செலுத்தினர். பள்ளிக் காலத்தில் சிறந்த பழக்க வழக்கங்களை கற்றுக்கொண்டோம். ஆரம்ப பள்ளியில் படித்த ரேங்க் கார்டுகளை சேகரித்து வைத்துள்ளேன்.

ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் ஒரே குடும்பம் போலவே இருந்தோம். சிறுவயதில் பெற்றோர்களுடன் வளர்ந்ததை விட ஆசிரியர்களுடனே அன்பையும், ஒழுக்கத்தையும் கற்று வளர்ந்தோம். இப்பள்ளியில் பயின்றதால், ஆரம்பக்கல்வி எங்களுக்கு சுமையாக இல்லாமல் இனிமையாக இருந்தது.






      Dinamalar
      Follow us