/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெள்ள பாதிப்பை தவிர்த்திட அதிகாரிகளுக்கு உத்தரவு
/
வெள்ள பாதிப்பை தவிர்த்திட அதிகாரிகளுக்கு உத்தரவு
ADDED : செப் 21, 2011 10:59 PM
கடலூர்:எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்பாடும் பாதிப்புகளை தவிர்த்திட தகுந்த முன்னேற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே துவங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனையொட்டி பருவமழை காலத்தில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கவும், மழை பாதிப்பு ஏற்பட்டால் அதிலிருந்து பொதுமக்களை பாதுகாத்திட தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்வது தொடர்பாக அந்தந்த மாவட்டங்களிலும் அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், பொதுப் பணித் துறையினர் நீர் நிலைகளின் கரைகள் மற்றும் நீர் வரத்து கால்வாய்களை ஆய்வு செய்து கரைகளை பலப்படுத்த வேண்டும்.
நீர் வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஷட்டர்களில் உள்ள பழுதுகளை நீக்கி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கரைகள் உடைப்பு ஏற்பட்டால் அதனை உடனடியாக அடைக்கும் பொருட்டு போதிய அளவிற்கு மணல் மூட்டைகள் மற்றும் சவுக்கு கட்டைகள் இருப்பு வைக்க வேண்டும்.
குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்து 'குளோரினேஷன்' செய்து குடிநீர் வினியோகிக்க வேண்டும். குடிநீர் குழாய் செல்லும் பகுதிகளில் கழிவு நீர் தேங்காமல் இருக்கவும், கழிவு நீர் தேங்கும் பகுதிகளில் கொசு மருந்து தெளிக்க வேண்டும்.
ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பேரூராட்சிகளின் செயல் நீர் நிலைகளை ஆய்வு செய்து கரைகளை பலப்படுத்தி, ஷட்டர்களின் பழுதுகளை நீக்கி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.தாசில்தார்கள், மழை மானியை சுற்றியுள்ள இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.புயல் பாதுகாப்பு மையங்களில் பழுதுகளை பொதுப்பணித் துறையினரை கொண்டு சரி செய்ய வேண்டும்.சமுதாய நலக்கூடம், கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்களை பார்வையிட்டு அவற்றில் பொதுமக்கள் தங்குவதற்கு உரிய வசதிகள் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற நீச்சல் தெரிந்தவர்கள் மற்றும் படகு உரிமையாளர்களின் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்களை வைத்திருக்க வேண்டும்.தீயணைப்புத் துறையினர் தீயணைப்பு வாகனங்கள், நீரை வெளியேற்றும் மோட்டார்கள், மரங்களை வெட்டுவதற்கான மின் அறுப்பான்கள் மற்றும் மீட்பு சாதனைங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வட்டார போக்குவரத்து துறையினர் லாரிகள், புல்டோசர் மற்றும் பொக்லைன் உரிமையாளர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை வைத்திருக்க வேண்டும்.நெடுஞ்சாலைத் துறையினர் மாவட்டத்தில் உள்ள பிரதான சாலைகளில் உள்ள பாலங்கள், சிறு பாலங்கள் மழையால் உடைப்பு ஏற்பட்டால் அதனை உடனடியாக சரி செய்திட ஜல்லி, மணல், சாக்குகள், சவுக்கு கட்டைகளை அந்தந்த பகுதிகளில் வைத்திருக்க வேண்டும்.கூட்டுறவுத் துறையினர் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தானிய கிடங்குகளிலும், அனைத்து ரேஷன் கடைகளிலும் போதிய அளவிற்கு தயார் நிலையில் இருப்பு வைத்திருக்க வேண்டும்.தாழ்வான பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை முன்னெச்சரிக்கையாக மேடான பகுதியில் வைக்க அறிவுறுத்த வேண்டும்.சுகாதாரம் மற்றும் கால்நடைத்துறையினர் அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருந்து மாத்திரைகள் இருப்பு வைப்பதோடு, அனைத்து மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்கவும், நடமாடும் மருத்துவக்குழுவும் அமைக்க வேண்டும். அனைத்து வாகனங்களும் பழுதுகள் நீக்கி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
வேளாண் துறையினர், விவசாயிகளை பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மழை காலங்களில் பள்ளிகளின் சாவிகளை வருவாய் துறையினர் கேட்கும் போது ஒப்படைக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மை கல்வித்துறை அதிகாரி அறிவுறுத்த வேண்டும்.
மழைக்காலங்களில் சீரான மின்சாரம் வழங்கிடவும், மின் விபத்துகளை தவிர்த்திட மின்கம்பங்களுக்கு மேல் செல்லும் மரக் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.மழை மற்றும் வெள்ள மீட்புப் பணியின் போது தேவைப்படும் உதவிகளை தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து பெற்றிட ஊரக வளர்ச்சி முகமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதனையொட்டி கடலூரில் இன்று காலை கலெக்டர் அமுதவல்லி தலைமையில் அனைத்துத் துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.