மாநில சாப்ட் டென்னிஸ் போட்டி கடலுார் மாணவிகள் அசத்தல்
மாநில சாப்ட் டென்னிஸ் போட்டி கடலுார் மாணவிகள் அசத்தல்
ADDED : ஜூன் 25, 2026 06:19 AM

கடலுார்: சேலத்தில் நடந்த மாநில அளவிலான நான்காவது மினி சப் ஜூனியர் சாப்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் குழு போட்டியில் கடலுார் அணி மூன்றாமிடம் பிடித்தது.
சேலம், ஓமலுாரில் கடந்த 20, 21ம் தேதிகளில் 4வது மினி சப்-ஜூனியர் மாநில அளவிலான சாப்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.
அதில் சேலம், வேலுார், கடலுார் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள், வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
மாணவிகளுக்கான, 9 வயதுக்குட்பட்டோர் பிரிவில், கடலுார் மாணவி கவிநயா முதலிடமும், 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கடலுார் மாணவிகள் பூஜாஸ்ரீ, சத்தியஸ்ரீ மூன்றாமிடமும் பெற்றனர். அதேபோல் குழு போட்டிகளில் சேலம் முதலிடமும், வேலுார் இரண்டாமிடமும், கடலுார் அணி மூன்றாமிடமும் பிடித்தன.
கடலுார் அணியில் இடம்பிடித்த மாணவிகள் பூஜாஸ்ரீ, யாஷித்தா, சத்தியஸ்ரீ, தனிஷ்கா, கவிநயா ஆகிய ஐந்து பேரையும் மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் மற்றும் பயிற்சியாளர் அப்பாதுரை பாராட்டினர்.
