/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓராண்டில் நடந்த சைபர் கிரைம் மோசடி... ரூ.14.67 கோடி
/
ஓராண்டில் நடந்த சைபர் கிரைம் மோசடி... ரூ.14.67 கோடி
ஓராண்டில் நடந்த சைபர் கிரைம் மோசடி... ரூ.14.67 கோடி
ஓராண்டில் நடந்த சைபர் கிரைம் மோசடி... ரூ.14.67 கோடி
ADDED : ஜன 22, 2025 09:43 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் கடந்த 2024ம் ஆண்டில், 14.67 கோடி ரூபாய், சைபர் கிரைம் மோடியில் பொதுமக்கள் பணத்தை இழந்துள்ளனர்.
சமீப காலமாக சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. வேலை வாங்கித்தருவதாக ஆன்லைன் மோசடி, கவர்ச்சிகரமான விளம்பரங்கள், தள்ளுபடி, வங்கி பணம் திருட்டு, முகநுால் வாயிலாக பழகி பணம் மோசடி, அரசு அதிகாரிகள் மற்றும் டாக்டர்களை மிரட்டி பணம் பறிப்பு, திருமண தகவல் மையம் மூலம் பணம் மோசடி, லோன் தருவதாக மோசடி, ஆன்லைன் டிரேடிங் மோசடி, எஸ்.பி.ஐ., ரிவார்ட் மோசடி என பல்வேறு வழிகளில் சைபர் மோசடிகள் நடந்து வருகிறது.
இதுகுறித்து பல்வேறு வழிகளில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனாலும், ஏமாந்து பணத்தை இழப்போர் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர, குறைந்தபாடில்லை. அதிலும் குறிப்பாக, சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் டாக்டர்கள், பொறியியல் படித்தவர்கள், கம்ப்யூட்டரில் வேலை செய்யும் நபர்கள் தான் அதிகளவில் பணத்தை பறிகொடுத்து வருகின்றனர்.
பணத்தை இழக்கும் பெரும்பாலோனார் அவமானம் மற்றும் தர்மசங்கடங்களை தவிர்க்க புகார் தருவது இல்லை. லட்சக்கணக்கில் இழப்போர் மட்டுமே புகார் கொடுக்கின்றனர். அந்த வகையில், மாவட்டத்தில் கடந்த 2024ம் ஆண்டு ஜன., முதல் டிச., வரையில், 3,149 சைபர் கிரைம் புகார்கள் பதிவாகியுள்ளன. அதில் 2,583 பண மோசடி புகார்கள் மற்றும் 569 பணமில்லாத இல்லாத மெயில் ஐ.டி., திருட்டு, மொபைல் போன் ஹாக் செய்வது உள்ளிட்ட புகார்கள் பதிவாகியுள்ளது.
பண மோசடி வழக்குகளில், 14 கோடியே 67 லட்சத்து 51 ஆயிரத்து 75 ரூபாயை பொதுமக்கள் மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர். இதில், 10 கோடியே 18 லட்சத்து 66 ஆயிரத்து 585 ரூபாய் சைபர் கிரைம் குற்றவாளிகள் வேறு வங்கி கணக்கிற்கு மாற்றாமல் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், 73 லட்சத்து 29 ஆயிரத்து 307 ரூபாய் உரிய நபர்களுக்கு மீட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் சைபர் கிரைம் மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த போலீசார் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி வருகின்றனர். அதன்படி, கடந்த ஓராண்டில் 26 கல்லுாரிகள், 12 பள்ளிகள், 51 பொது இடங்கள், 12 ரயில் மற்றும் பஸ் நிலையங்கள், 3 சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட 124 இடங்களில் விழிப்புணர்வு முகாம் நடத்தியுள்ளனர். ஆனாலும் புகார்கள் குறைந்தபாடில்லை. எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க, மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.