ADDED : செப் 14, 2026 08:22 PM
கடலுார் மாவட்டத்தில் 1530 விநாயகர் சிலைகள் நாளை நீர்நிலைகளில் விஜர்சனம் செய்யப்படுகிறது
கடலுார், செப் 15–
கடலுார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தயார் செய்யப்பட்ட 1540 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ளன. நாளை நீர்நிலைகளில் விஜர்சனம் செய்யப்படவுள்ளன.
தமிழகம் முழுவதும் நேற்றுவிநாயகர் சதுர்த்தி விழா கோலாகாலமாக கொண்டாடப்பட்டது. கடலுார் மாவட்டத்தில் நேற்று காலை முதல் விதவிதமான விநாயகர் சிலைகள் மக்கள் வாங்கி சென்றனர். மாவட்டத்தில் ஆங்காங்கே பந்தல்கள் அமைக்கப்பட்டு தற்காலிகமாக
மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவி பூஜைகள் செய்யப்பட்டன.
பல இடங்களில் இளைஞர்கள், கிராம பகுதிகளில் குழுவாக விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஏற்றி பந்தல் அமைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டன. அவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் 3வது நாள் அல்லது 5வது நாள் ஊரின் அருகில் உள்ள நீர்நிலைகளில் விஜர்சனம் செய்யப்படுகிறது.
வீடுகள் மற்றும் கடைகளில் சிறிய அளவு மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பூஜை அறையில் வைத்து, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, பழங்கள் ஆகியவற்றை வைத்துப் பூஜை செய்யப்பட்டன.
கடலுார் மாவட்டத்தில் கடலுாரில் 130 சிலைகளும், சிதம்பரத்தில் 183 சிலைகளும், விருத்தாசலத்தில் 197 சிலைகளும், நெய்வேலியில் 270 சிலைகளும், சேத்தியாதோப்பு 261 சிலைகளும், பண்ருட்டியில் 333 சிலைகளும், திட்டக்குடியில் 166 சிலைகளும் ஆகமொத்தம் 1530 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்திலேயே அதிகளவு பண்ருட்டியில் 333 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
மாவட்ட நிர்வாகம் விநாயகர் சிலை வைத்து வழிபடுவதில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பொதுமக்கள் கடலுார் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகளை நிறுவி, ஊர்வலமாக எடுத்து செல்ல உரிய அனுமதியினை சம்மந்தப்பட்ட சப் கலெக்டர் விண்ணப்ப படிவம் – I ஐ பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன் உரிய தடையின்மை சான்று இணைத்து விண்ணப்பம் அளிக்க வேண்டும்.
விண்ணப்பம் முழுமையாக பரிசீலனை செய்து ஆணை வழங்கப்படும். விண்ணப்பித்து உரிய அனுமதி பெற்ற நபர்கள் மட்டுமே சிலைகள் நிறுவி ஊர்வலம் நடத்திட வேண்டும். அனுமதி பெற்ற நபர்கள் சப் கலெக்டர் அல்லது ஆர்.டி.ஓ., வால் வழங்கப்பட்ட அரசின் நிபந்தனைக்களுக்குட்பட்டு செயல்பட வேண்டும். சிலைகளை விநாயகர் சதுர்த்தி முடிந்த 5 நாட்களுக்குள் சிலைகளை விஜர்சனம் செய்திடல் வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
