கிடப்பில் இணைப்பு சாலை பணி விரைந்து முடிக்க கோரிக்கை
கிடப்பில் இணைப்பு சாலை பணி விரைந்து முடிக்க கோரிக்கை
UPDATED : செப் 15, 2026 04:30 PM
ADDED : செப் 15, 2026 03:32 PM
திட்டக்குடி:கிடப்பில் போடப்பட்ட கிராம இணைப்பு சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டக்குடி அடுத்த கூடலுார் - கொடிகளம் கிராமங்களை இணைக்கும், சாலையை பயன்படுத்தி, கூடலுார், கொடிகளம், திருவட்டத்துறை மற்றும் அரியலுார் மாவட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்கு பெண்ணாடம், திட்டக்குடி, நல்லுார், வேப்பூர், செந்துறை, அரியலுார், அகரம் சீகூர் உட்பட பல பகுதிகளுக்கு எளிதில் சென்று வருகின்றனர்.
போதிய பராமரிப்பில்லாமல் இருக்கும் இந்த சாலையில் பல இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியதால் இவ்வழியே செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாவதுடன், பைக்கில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி வந்தனர்.
அதைத்தொடர்ந்து, கடந்த 4 மாதங்களுக்கு முன் தார்சாலை அமைக்க ஒரு கி.மீ., துாரத்திற்கு ஜல்லிகள் கொட்டப்பட்டு, சாலை சீரமைப்பு பணிகள் துவங்கியது. ஆனால், ஜல்லிகள் கொட்டப்பட்டதுடன் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் இவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி தொடர்கதையாகிவிட்டது.
எனவே, கிடப்பில் போடப்பட்ட கூடலுார் - கொடிகளம் கிராம இணைப்பு சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
