ADDED : செப் 17, 2026 07:44 PM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் டெங்கு பாதித்த நபரின் குடியிருப்புகளை சுற்றி சுகாதாரத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த 27 வயது வாலிபர், சென்னையில் பணிபுரிந்தபோது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். தற்போது அவர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், அவரது வசிப்பிடம் முழுவதும் சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வட்டார மருத்துவ அலுவலர் பாரிசெல்வி தலைமையில் நடமாடும் மருத்துவ அலுவலர் சுகன்யா, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், துணை ஆய்வாளர் சதிஷ் ஆகியோர் வீடுகள் தோறும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர். மழைநீர் தேங்கி நிற்காமல் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.
தேங்காய் ஓடுகள், பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் என தண்ணீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்துமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பிளீச்சிங் பவுடர் தெளித்து, காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக சிகிச்சைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
