ADDED : பிப் 21, 2026 05:07 AM

விருத்தாசலம்: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் செடலணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருத்தாசலம் சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், மகா சிவராத்திரி ரணகளிப்பு உற்சவம், கடந்த, 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. கடந்த,16ம் தேதி மணிமுக்தாற்றில் மயானக்கொள்ளை ந டந்தது.
முக்கிய நிகழ்வாக, நேற்று காலை 9:00 மணியளவில் கோவிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக மணிமுக்தாற்றுக்கு சென்று சக்தி கரகம் அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து, பகல் 12:00 மணியளவில் பால்குடம், தீச்சட்டி சுமந்தும், செடல் மற்றும் விமான அலகு அணிந்தும் பக்தர்கள் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இரவு அங்காள பரமேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். இன்று மாலை 6:00 மணியளவில் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
