/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் 'தில்லு முல்லு': படகு சவாரிக்கு மணிக்கணக்கில் காத்திருக்கும் அவலம்
/
பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் 'தில்லு முல்லு': படகு சவாரிக்கு மணிக்கணக்கில் காத்திருக்கும் அவலம்
பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் 'தில்லு முல்லு': படகு சவாரிக்கு மணிக்கணக்கில் காத்திருக்கும் அவலம்
பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் 'தில்லு முல்லு': படகு சவாரிக்கு மணிக்கணக்கில் காத்திருக்கும் அவலம்
ADDED : ஜன 03, 2024 12:31 AM

சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில், உலக புகழ்பெற்ற வன சுற்றுலா மையம் உள்ளது. 'மாங்குரோவ்' எனும் சுரபுண்ணை தாவரங்கள் மற்றும் பல்வேறு மூலிகை தாவரங்கள் இங்கு நிறைந்துள்ளன.
இதனால், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி செல்கின்றனர். பண்டிகை காலங்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கில், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.
வனக்காடுகளை சுற்றி பார்க்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் மோட்டார் பொருத்தப்பட்ட படகுகள் மற்றும் துடுப்பு படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
மோட்டார் படகில் செல்ல 40 நிமிடங்களுக்கு ரூ. 1800, துடுப்பு படகு ஒரு மணி நேரத்திற்கு, 6 நபர்களுக்கு ரூ.600 என, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. போதுமான மோட்டார் படகுகள் இல்லாததால், சுற்றுலா பயணிகள் பல மணி நேரம் காத்திருந்து சவாரி செய்யும் நிலை இருந்து வருகிறது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுற்றுலா மையத்தில் உள்ள ஊழியர்கள், குறுக்கு வழியில் பணம் பார்த்து வருகின்றனர்.
அரசியல் கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் சிபாரிசு செய்யும் நபர்களிடம், பெட்ரோல் செலவுக்கு பணம் கொடுங்க என ஊழியர்கள் மூலம் ரூ. 1,500 முதல் ரூ. 2000 வரையில் வாங்கப்படுகிறது. அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கணக்கில், சுற்றுலா பயணிகள் சிலரையும் அந்த கணக்கில் சேர்த்து பணம் பெறுகின்றனர்.
பணம் கட்டிவிட்டு நீண்ட நேரம் சுற்றுலா பயணிகள் படகு சவாரிக்கு காத்திருக்கும் நிலையில், சிபாரிசில் வரும் நபர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, படகில் அழைத்து செல்கின்றனர். டிக்கெட் வழங்காமல் ஊழியர்களிடம் பணம் கொடுத்துவிட்டு நேரடியாக படகு சவாரி செய்ய அனுமதிக்கப்படுவதால், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு வரவேண்டிய வருவாய், இழப்பு ஏற்படுகிறது. சுற்றுலா பயணிகளும் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையில் தவிக்கின்றனர்.
எனவே, படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவதை முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.