/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சம்பா சாகுபடிக்கு நேரடி நெல் விதைப்பு பணி தீவிரம்
/
சம்பா சாகுபடிக்கு நேரடி நெல் விதைப்பு பணி தீவிரம்
ADDED : செப் 19, 2024 11:47 PM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பகுதிகளில், சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வீரணம் ஏரி தண்ணீர் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் நிரப்பட்டு, அங்கிருந்து மானம்பாத்தான் வாய்க்கால் மற்றும் அரியகோஷ்டி வாய்க்கால் மூலம், பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதி கிராமங்களில் சம்பா, குறுவை என இரு போகம் விவசாயம் செய்து வந்தனர்.
காலப்போக்கில், வாய்க்காலில் போதுமான அளவு தண்ணீர் வராததால், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு போகம்சம்பா மற்றும் உளுந்து, பயிர் விளைத்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக மழையை நம்பியே சம்பா சாகுபடி மட்டுமே விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தாண்டு காவிரியில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால் பாசனத்திற்கு பற்றாக்குறை இன்றி தண்ணீர் கிடைக்கும் நிலை உள்ளது. இதனால், பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில், சம்பா பருவதற்கு நேரடி நெல் விதைப்பு செய்வதற்கு விவசாய நிலங்களில் செம்மறி ஆடுகளை கிடைக்கட்டியும், இயற்கை உரங்களான கால்நடை கழிவுகளை தெளித்து மேம்படுத்தினர். மேலும், நிலங்களில் உள்ள மேடு பள்ளங்களை மராமத்து பணி செய்து சமப்படுத்தியும், வரப்புகளை சீரமைத்தும் வருகின்றனர். நேரடி விதைப்பு செய்ய டிராக்டர் மூலம் புழுதி உழவு செய்தனர்.
பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட குறியாமங்களம், கீழமணக்குடி, தச்சக்காடு, சேந்திரக்கிள்ளை, அருண்மொழித்தேவன், சின்னாண்டிக்குப்பம், சின்னகுமட்டி, பூவாலை, வேளங்கிப்பட்டு, மணிக்கொல்லை,
ஆதிவராகநல்லுார், தம்பிக்குநல்லான்பட்டிணம், அரியகோஷ்டி உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மழையை நம்பியும்,மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கிடைக்கும் என்பதை நம்பி கடந்த ஒரு வாரமாக நேரடி நெல் விதைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.