அதிகாரிகள் சரியாக பதில் அளிக்காததால் மக்கள் அதிருப்தி!கடலுார் துறைமுக கருத்து கேட்பு கூட்டத்தில் பரபரப்பு
அதிகாரிகள் சரியாக பதில் அளிக்காததால் மக்கள் அதிருப்தி!கடலுார் துறைமுக கருத்து கேட்பு கூட்டத்தில் பரபரப்பு
UPDATED : ஜூலை 09, 2026 08:53 PM
ADDED : ஜூலை 09, 2026 08:21 PM

கடலுார்: கடலுார் துறைமுகம் விரிவாக்கம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் சரியாக பதில் அளிக்காததால், பொதுமக்கள் அதிருப்திக்குள்ளாகினர். இதில், ஒரு தரப்பினர், கூட்டத்தை புறக்கணித்து வெளியேறியதால், பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார், துறைமுகத்தில், மகதி கடலுார் போர்ட் அன்டு மேரிடைம் பிரைவேட் நிறுவனம் சார்பில், 650 கோடி ரூபாய் மதிப்பில், சரக்கு கையாளும் திறனை ஆண்டுக்கு, 5.68 மில்லியன் டன்னில் இருந்து, 11.48 மில்லியன் டன்னாக விரிவாக்குதல் மற்றும், 59.09 ெஹக்டேர் (146.01) ஏக்கர் பரப்பளவில் கப்பல் கட்டுதல் மற்றும் பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் மூலம் ஆண்டிற்கு, 50 லட்சம் மெட்ரிக் டன் அளவில், அனைத்து வகை சரக்குகளையும் கையாளும் வகையில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நேற்று கடலுார், துறைமுகத்தில் நடந்தது. டி.ஆர்.ஓ., புண்ணியகோட்டி தலைமை தாங்கினார்.
மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள், துறைமுக அதிகாரிகள், பச்சையாங்குப்பம் மற்றும் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள், மீனவர்கள் பங்கேற்றனர்.
இதில், பொதுமக்கள் பேசியதாவது:
கடலுார் துறைமுகத்தை விரிவுபடுத்துவதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடத்துவது குறித்து, முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை.
சிப்காட் தொழிற்சாலைக்கு நிலங்கள், வீடுகளை கொடுத்தவர்களுக்கு இதுவரை வேலைவாய்ப்பு வழங்கவில்லை.
இதுபோன்ற நிலையில், துறைமுகம் விரிவாக்கத்திற்கு நிலங்கள், வீடுகளை கையகப்படுத்தும் போது, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
ரயிலில் சரக்குகளை ஏற்றவும், இறக்கவும் எந்தெந்த இடத்தில் ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது என்ற விவரங்களும் தெரிவிக்கவில்லை.
பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
இது குறித்து, அதிகாரிகள் சரியாக பதில் அளிக்காததால், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, ஒரு தரப்பினர் கூட்டத்தை புறக்கணித்து சென்றதால் பரபரப்பு நிலவியது. அதனைத் தொடர்ந்து, கூட்டம் முடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். துறைமுகம் விரிவாக்கம் தொடர்பாக ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கலாம் என அதிகாரிகள் கூறினர்.
