/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., - அ.தி.மு.க., எதிர்ப்பு போராட்டம் விருதை நகராட்சியில் திடீர் பரபரப்பு
/
தி.மு.க., - அ.தி.மு.க., எதிர்ப்பு போராட்டம் விருதை நகராட்சியில் திடீர் பரபரப்பு
தி.மு.க., - அ.தி.மு.க., எதிர்ப்பு போராட்டம் விருதை நகராட்சியில் திடீர் பரபரப்பு
தி.மு.க., - அ.தி.மு.க., எதிர்ப்பு போராட்டம் விருதை நகராட்சியில் திடீர் பரபரப்பு
ADDED : ஜன 11, 2025 06:30 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் நகர மன்றக் கூட்டத்தில், தர்ணாவில் ஈடுபட்ட அ.தி.மு.க., கவுன்சிலர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற கூட்டம் நேற்று நடந்தது. சேர்மன் சங்கவி முருகதாஸ் தலைமை தாங்கினார். அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
அப்போது, கூட்டத்திற்கு புடவை கட்டி வந்த தி.மு.க., கவுன்சிலர் ஞானசேகர், அண்ணா பல்கலை., மாணவி பாலியல் சம்பவத்திற்கு பொறுப்பேற்று கவர்னர் ரவி பதவி விலக வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டார்.
அ.தி.மு.க., கவுன்சிலர்கள், 'யார் அந்த சார்' என்ற வாசகம் அடங்கிய கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர்.
தி.மு.க., கவுன்சிலர்கள், அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அ.தி.மு.க.. நிர்வாகி சுதாகர் மற்றும் இ.பி.எஸ்., போட்டோவுடன் 'இவர்தான் அந்த சார்' என்ற வாசகம் அடங்கிய போஸ்டரை கையில் ஏந்தியபடி வந்தனர். இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
அப்போது, சேர்மன் சங்கவி முருகதாஸ், அ.தி.மு.க., கவுன்சிலர்களை, கருப்பு பேட்ஜை அகற்ற கூறினார். அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மறுக்கவே, 67 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக கூறி, சேர்மன் அங்கிருந்து சென்றார்.
அப்போது, அவருடன் வெளியேறிய தி.மு.க., கவுன்சிலர்கள், அ.தி.மு..க., கவுன்சிலர்கள் நகராட்சி வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க., கவுன்சிலர்கள், தீர்மானங்களில் முறைகேடு இருப்பதாக கூறி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சேர்மன் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் கோரிக்கை மனு அளிக்க வேண்டும் எனக் கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதனால், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்ளிட்ட அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 5 பேரை, போலீசார் கைது செய்தனர்.
நகர மன்றக்கூட்டத்தில் அ.தி.மு.க., - தி.மு.க., கவுன்சிலர்கள் மாறி மாறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.