தி.மு.க., வேட்பாளர் சபா ராஜேந்திரன் ஓட்டு சேகரிப்பு
தி.மு.க., வேட்பாளர் சபா ராஜேந்திரன் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 21, 2026 11:13 PM

நெய்வேலி: நெய்வேலி தொகுதியில் 3 வது முறையாக போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் சபா ராஜேந்திரன்,
பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அவருக்கு தி.மு.க., மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் ஜே.சி.பி., மூலம் மலர்களை துாவி,
மாலைகள் அணிவித்து, ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
அப்போது சபா ராஜேந்திரன் பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகளாக எம்.எல்.ஏ., வாக இருந்த போது தொகுதி அடிப்படை தேவை, அனைத்து கிராமங்களின் வளர்ச்சிக்காக ஏராளமான பணிகளை செய்துள்ளேன்.
நான் வெற்றி பெற்றவுடன் வரும் 2 ஆண்டுகளுக்குள் தொகுதியில் இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்திடும் வகையில், டைடல் பார்க் அமைத்திடுவேன்.
என்.எல்.சி., தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் 8 வது ஊதிய மாற்று ஒப்பந்தம் சிறப்பாக அமைந்திட தொ.மு.ச., மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களினருடன் கலந்து பேசி அடுத்த 5 ஆண்டுகளுக்கான சிறந்த ஊதியமாற்ற ஒப்பந்தத்தை உருவாக்குவோம்.
என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு கிடைக்க செய்வோம். பலா மற்றும் முந்திரி விவசாயிகளின் வாழ்வில் ஏற்றம் பெற்றிட நடவடிக்கைளை மேற்கொள்வோம்.
நெய்வேலி ஆர்ச் கேட் வளாகத்தில் புதிய நவீன வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய பஸ் நிலையம் கொண்டு வருவேன்.
தொகுதியில், மாவட்ட அரசு பொது மருத்துவமனைக்கு நிகரான அரசு பொது மருத்துவமனை கொண்டு வருவேன்.
வடக்குத்து ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்திட, கிராமங்கள் தோறும் இளைஞர்களுக்கான, விளையாட்டு மைதானங்கள் மற்றும் நவீன உடற்பயிற்சி கூடங்கள் அமைத்திடுவேன்.
என்.எல்.சி., பணியாளர்கள் மற்றும் தொகுதி மக்களின், குறிப்பாக கிறிஸ்துவர் , இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையின உடன்பிறப்புகளின் பாதுகாவலனாக இருந்து , உங்களில் ஒருவனாக வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு, தமிழக அளவில் நெய்வேலி தொகுதி ஒளிர்ந்திட உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
