கூட்டணிக்கட்சி நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய தே.மு.தி.க.,
கூட்டணிக்கட்சி நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய தே.மு.தி.க.,
ADDED : மார் 31, 2026 07:25 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் சட்டசபை தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா போட்டியிடுகிறார்.
அவர், வரும் 6ம் தேதி மனுதாக்கல் செய்து, தேர்தல் பிரசாரத்தை துவக்க உள்ளார். இதனால், தே.மு.தி.க., நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் பணியில் உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.
ஆனால், தொகுதியை பெற பகீரத முயற்சி மேற்கொண்ட தி.மு.க., - காங்., நிர்வாகிகள் பலரும், தே.மு.தி.க., வேட்பாளருக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்து விட்டு, வழக்கமான பணியில் ஈடுபட துவங்கினர். விருத்தாசலத்திற்கு வந்த அமைச்சர் கணேசனுக்கு தரப்பட்ட வரவேற்பு நிகழ்வை தவிர்த்து, மற்ற நேரங்களில் 'சைலண்ட் மோடு'க்கு சென்றனர்.
இந்நிலையில், தே.மு.தி.க., மாவட்டச் செயலாளர் சிவக்கொழுந்து, நேற்று தனியார் திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து, தேர்தல் வியூகம் குறித்து உரையாடினார். அப்போது, அமைச்சர் கணேசன் ஆலோசனையின்படி பிரசார பணிகளை மேற்கொள்ள முடிவெடுத்தனர்.
தொடர்ந்து, தி.மு.க., - காங்., - வி.சி., உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அனைவரையும் சிவக்கொழுந்து நேரில் சந்தித்து, தே.மு.தி.க., சார்பில் நன்றியும், பிரேமலதா வெற்றிக்கு உறுதுணையாக இருக்குமாறு ஆதரவும் திரட்டினார்.
