ADDED : ஏப் 03, 2026 05:19 AM

நெல்லிக்குப்பம்: பண்ருட்டி தொகுதியில் தி.மு.க., போட்டியிடாத அதிருப்தியில் தொண்டர்கள் இருப்பதால் கட்சி அலுவலகம் வெறிச்சோடியது.
தமிழகத்தில் கடந்த, 2016 ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் சென்னையை சேர்ந்த விவசாய தொழிலாளர் கட்சி தலைவர் பொன்குமார் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
கடந்த, 2021 ம் ஆண்டு தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் த.வா.க., சார்பில் குறிஞ்சிப்பாடி தொகுதியை சேர்ந்த வேல்முருகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த, 2011ம் ஆண்டு முதல் நடந்த தேர்தல்களில் தி.மு.க.,வில் கூட்டணி கட்சியினரே போட்டியிட்டனர்.
இதனால் வரும் சட்டசபை தேர்தலிலாவது தி.மு.க., நேரடியாக களம் காண வாய்ப்புள்ளதாகவும், அதுவும் தொகுதியை சேர்ந்தவரே போட்டியிடுவார் எனவும் தொண்டர்கள் நம்பியிருந்தனர்.
ஆனால் பண்ருட்டி தொகுதி தி.மு.க., கூட்டணியில் வி.சி.க.,விற்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அக்கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். சாதாரண நாட்களில் கூட கட்சி அலுவலகத்தில் பலர் இருப்பார்கள். ஆனால் அதிருப்தியில் தொண்டர்கள் இருப்பதால் தேர்தல் சமயத்தில் கட்சி அலுவல கம் வெறிச்சோடியது.
அ.தி.மு.க., உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு அலுவலகம் கிடையாது. எந்த கட்சியினரும் தேர்தலில் ஆர்வம் காட்டாததால் நெல்லிக்குப்பம் நகரத்தில் தேர்தல் களையிழந்து காணப்படுகிறது.
