ADDED : ஏப் 16, 2026 06:05 PM

நெய்வேலி: நெய்வேலியில், லோக்சபா தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்தை எதிர்த்து சபா ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்திய லோக்சபாவில் தற்போது 543 உறுப்பினர்கள் உள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசியலமைப்பு திருத்த மசோதா (131வது திருத்தம்) மூலம் இந்த எண்ணிக்கையை, 850 ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.
இதில் 815 இடங்கள் மாநிலங்களுக்கும், 35 இடங்கள் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒதுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த மறுவரையறை கடந்த, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நடைபெற உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்த மசோதா நிறைவேறினால், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் உள்ளது. அதனால், தமிழகம் முழுவதும் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் நெய்வேலியில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க, வேட்பாளர் சபா ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
