ADDED : செப் 29, 2026 08:54 PM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மன அழுத்ததில் இருந்த டாக்டர், அதிக மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் பூதாமூர் சி.என்.சி., நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் பாரதிராஜா,33; டாக்டரான இவர், வேப்பூரில் கிளினிக் நடத்தி வந்தார். இவரது மனைவி பிரியங்கா கருத்து வேறுபாடு காரணமாக, தனது 9 மாத குழந்தையுடன் கடந்தாண்டு பிரிந்து சென்றுவிட்டார்.
இதனால், மன அழுத்தத்தில் இருந்த பாரதிராஜா சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். தனது பெற்றோருடன் வசித்து வந்த பாரதிராஜா, நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு ஓய்வெடுக்க சென்றவர், நேற்று மாலை 3:30 மணி வரை அவர் வெளியே வரவில்லை.
சந்தேகமடைந்த அவரது சகோதரர் ராம்குமார், அறைக்கு சென்று பார்த்தபோது, அறையில் இருந்து மூச்சுதிணறல் சத்தம் கேட்டது. உடன், அக்கம் பக்கத்தினர் உதவியுடன், கதவை உடைத்து உள்ளே சென்றபோது, பாரதிராஜா, வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்தார்.
உடன் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார். மேலம், தற்கொலை நோக்கத்தில் அதிக மாத்திரை சாப்பிட்டதில் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
விருத்தாசலம் போலீசார், பாரதிராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
