3.5 டன் ரேஷன் அரிசி கடத்தல் கூரியர் வேனுடன் டிரைவர் கைது
3.5 டன் ரேஷன் அரிசி கடத்தல் கூரியர் வேனுடன் டிரைவர் கைது
ADDED : செப் 25, 2026 04:11 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே கூரியர் வேனில் கடத்திச் செல்லப்பட்ட 3.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்துள்ளது. கடத்தல் ஆசாமிகள், மக்களிடம் கிலோ அரிசி ரூ.5க்கு வாங்கி , மொத்தமாக பிற மாநிலங்களுக்க கடத்திச் சென்ற, அங்கு பாலீஷ் செய்து, பிராண்டட் கம்பெனிகள் பெயரில் கூடுதல் விலைக்கு மீண்டும் விற்பனைக்கு அனுப்புவதாக தகவல் நிலவுகிறது.
இந்நிலையில் ரேஷன் அரிசி கடத்திக் கொண்டு வேன் ஒன்று வருவதாக கிடைத்த தகவலின் பேரில் விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் பாரதநேரு மற்றும் போலீசார் நேற்று விடியற்காலை 5:00 மணிக்கு காட்டுக்கூடலுார் சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அவ்வழியே வந்த டி.என்.11 – பி.கே.4368 பதிவெண் கொண்ட பொலிரோ பிக் அப் கூரியர் வேனை நிறுத்தி சோதனை செய்ததில், 70 மூட்டைகளில் 3,500 கிலோ ரேஷன் அரிசியை, திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் அடுத்த ராசாம்பாளையம், கீழூர் சபாபதி மகன் சிவா,32; கடத்திச் செல்வதும் தெரிந்தது.
வேனை பறிமுதல் செய்த போலீசார், குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ், ஏட்டு அமீர் ஆகியோர் சிவாவை கைது செய்து, வேனை பறிமுதல் செய்தனர். மேலும், ரேஷன் அரிசியை நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.
கூரியர் வேன்:
பொதுவாக கூரியர் வேனை யாரும் நிறுத்தி சோதனை செய்வதில்லை என்பதால், ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்துகின்றனர். சில மாதங்களுக்கு முன் கருவேப்பிலங்குறிச்சி அருகே கூரியர் வேனில் கடத்தி வரப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
