ADDED : மார் 11, 2026 04:39 AM
உ ட்கோட்ட தலைமையிடமான விருத்தாசலத்தில் போக்குவரத்துப்பிரிவு இன்ஸ்பெக்டர், 3 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் பணிபுரிகின்றனர்.
இவர்கள் வாயிலாக நகரில் பிரதான சாலைகளான கடைவீதி நான்குமுனை சந்திப்பு, பாலக்கரை ரவுண்டானா, ஜங்ஷன்ரோடு, கடலுார் ரோடு ஆகிய பகுதிகளில் காலை, மாலை வேளையில் வாகன நெரிசல் சீரமைக்கப்பட்டு வந்தது.
ஆனால், சமீப காலமாக வாகன நெரிசலை சீரமைப்பதை காட்டிலும், வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்வதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. குறிப்பாக நகரின் நான்கு எல்லைகள் மட்டுமல்லாது நகருக்குள் பாலக்கரை, கடைவீதி, எல்.ஐ.சி., முடக்கு ஆகிய பகுதிகளில் வாகன சோதனை தீவிரமாக நடக்கிறது.
அப்போது மது அருந்திவிட்டு வருவோர் மீது வழக்குப் பதிவு செய்வதுடன், சிலரை முறைகேடாக பணம் பெற்றுக் கொண்டு விடுவிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், காலை 11:00 மணிக்கே வாகன சோதனை என்ற பெயரில் விவசாயிகள், பொதுமக்களை அலைக்கழிப்பதாக கூறி பா.ம.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசாரை அழைத்து டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் விசாரித்துள்ளார்.
அப்போது, விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். முறைகேடாக நடந்து கொள்வது நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
