/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அலுவலர் பற்றாக்குறையால் தேர்தல் பணி கேள்விக்குறி: கடமைக்கு நடக்கிறதா வாகன சோதனை?
/
அலுவலர் பற்றாக்குறையால் தேர்தல் பணி கேள்விக்குறி: கடமைக்கு நடக்கிறதா வாகன சோதனை?
அலுவலர் பற்றாக்குறையால் தேர்தல் பணி கேள்விக்குறி: கடமைக்கு நடக்கிறதா வாகன சோதனை?
அலுவலர் பற்றாக்குறையால் தேர்தல் பணி கேள்விக்குறி: கடமைக்கு நடக்கிறதா வாகன சோதனை?
ADDED : மார் 25, 2024 05:49 AM
திட்டக்குடி: கடலுார் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படையில் போதுமான அதிகாரிகள் இல்லாததால் முறையாக வாகன சோதனை மேற்கொள்ள முடியாமல் அதிகாரிகள் அவதிப்படுகின்றனர்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 16ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.
தேர்தல் அறிவிப்பு வந்த அன்றே நிலையான கண்காணிப்பு குழு, பறக்கும் படை என குழு உருவாக்கப்பட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருள் கொடுப்பதை தடுக்க தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. கடந்த தேர்தல்களில் ஒரு குழுவிற்கு அதிகாரி ஒருவரும், மூன்று போலீசார், வாகன ஓட்டுனர், கேமரா மேன் இருப்பர். வாகனங்களை நிறுத்த ஒரு போலீசும், சோதனையில் ஈடுபட ஒரு போலீஸ் மற்றும் அதிகாரி, பாதுகாப்புக்கு ஒரு போலீஸ் என இருப்பர்.
தற்போது தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் அன்று ஒரு அலுவலர், இரண்டு போலீஸ் இருந்தனர். ஆனால், சில தினங்களிலும் அதிலும் ஆட்குறைப்பு செய்யப்பட்டது.
கடலுார் லோக்சபா தொகுதியில் கடலுார், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி என ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. திட்டக்குடி தொகுதியில் தற்போது பறக்கும் படையில் ஒரு அலுவலர், இரண்டு போலீசார் உள்ளனர்.
அதேபோல் நிலையான கண்காணிப்பு குழுக்களில் ஒரு அலுவலர், ஒரு போலீஸ் மட்டுமே உள்ளனர். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சேலம் தேசிய நெடுஞ்சாலை போன்ற பகுதிகளில் சீறிப்பாய்ந்து வரும் வாகனங்களை ஒரு போலீசைக்கொண்டு நிறுத்தி சோதனை செய்வது இயலாத காரியமாக உள்ளது.
ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்வதற்குள், பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து சென்றுவிடுகிறது. இதனால் அதிகாரிகள் வாகன சோதனையை முறையாக செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, ஒரு அலுவலரோடு இரண்டு போலீசார் இருந்தால் தான் வாகனங்களை முறையாக சோதனை செய்யமுடியும்.
ஒவ்வொரு குழுவிற்கும் கூடுதலாக ஒரு போலீசாரை நியமனம் செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டுப்பதிவிற்கு முன், இன்னும் கூடுதலாக போலீசாரை நியமித்தால் தான் பணம், பரிசுப்பொருட்கள் எடுத்துச்செல்வதை தடுக்க முடியும் என்றனர்.

