/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நகைக்காக மூதாட்டி கொலை: புவனகிரியில் வாலிபர் கைது
/
நகைக்காக மூதாட்டி கொலை: புவனகிரியில் வாலிபர் கைது
ADDED : ஜூலை 10, 2025 11:23 PM

புவனகிரி: புவனகிரி அருகே நகை்காக மூதாட்டியை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், புவனகிரி தாலுகா, மருதுார் அடுத்த நத்தமேடு, செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வேலு மனைவி சந்திரா,60; கணவர் இறந்த நிலையில் சந்திரா தனியாக வசித்தார். நேற்று முன்தினம் மாலை சந்திரா வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், மருதுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், டி.எஸ்.பி., லாமேக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சந்திரா இறந்து கிடந்தது தெரிந்தது.
போலீசார் உடலை மீட்டு விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். எஸ்.பி., ஜெயக்குமார், சம்பவ இடத்தை பார்வையிட்டார். மருதுார் போலீசார் வழக்குப் பதிந்து அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மகன் பசுபதி,27; என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
இதில், சந்திரா வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற பசுபதி, சந்திராவை தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்து, இரண்டரை சவரன் நகைகளை திருடிச் சென்றதை ஒப்புக் கொண்டார். உடன், போலீசார் வழக்குப் பதிந்து பசுபதியை கைது செய்தனர்.
இக்கொலை வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.