ADDED : மார் 13, 2026 06:44 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் சட்டசபை சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்திற்கு, ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா தலைமை தாங்கினார்.
ஆர்.டி.ஓ., நேர்முக உதவி யாளர் அந்தோணிசாமி முன்னிலை வகித்தார். இதில், நகர அனைத்து வர்த்தகர் நல சங்க தலைவர் கோபு, செயலர் மணிவண்ணன், பொருளாளர் சேட்டு முகம்மது, மாவட்ட பொருளாளர் தமிழ்வாணன், இளை ஞரணி நிஷாந்த் மற்றும் விருதை டிஜிட்டல் பிரிண்டிங் உரிமையாளர் சங்கம், விருத்தாசலம் அச்சக உரிமையாளர் சங்கம், ேஹாட்டல் ஸ்வீட்ஸ், பேக்கரி உரிமையாளர் சங்கம், திருமண மண்டபம், தங்கும் விடுதி உரிமையாளர்கள், ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது, திருமண மண்டபம், தங்கும் விடுதி மற்றும் இதர சமுதாய நல கூடங்களை அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு வாடகைக்கு விடும்போது, அதன் விவரத்தினை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.
தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள், துண்டுபிரசுரம் மற்றும் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் செய்வதற்கு முன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் படிவம் 1ல் அனுமதி பெற்று அச்சிட வேண்டும்.
கட்சி சம்பந்தமான பொதுக்கூட்டம், ஊர்வலம் போன்ற நிகழ்வுகளை அனுமதியின்றி ஒளிபரப்பகூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டன.
