வீராணம் ஏரி தண்ணீரை திறக்க விவசாயிகள்வலியுறுத்தல்:விதைப்பு செய்யப்பட்ட நெற்பயிர் கருகுகிறது
வீராணம் ஏரி தண்ணீரை திறக்க விவசாயிகள்வலியுறுத்தல்:விதைப்பு செய்யப்பட்ட நெற்பயிர் கருகுகிறது
UPDATED : செப் 26, 2026 05:24 AM
ADDED : செப் 25, 2026 06:53 PM

கடலுார்,:வீராணம் ஏரியில் இருந்து தண்ணீரை திறந்தால்தான், விதைப்பு செய்யப்பட்ட நெற்பயிரை காப்பாற்ற முடியும் என குறைக்கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நேற்று கடலுார், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., புண்ணியகோட்டி, வேளாண் இணை இயக்குனர் வசந்தா முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
மாதவன்: கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் நேரடி நெல் விதைப்பு செய்த பயிர்களுக்கு வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவாதம் கொடுக்க வேண்டும். விதைக்கப்பட்ட நெற்பயிர் கருகும் நிலையில் உள்ளது. அணைக்கரையிருந்து ராஜன் வாய்க்காலில் தண்ணீர் திறந்து கான்சாகிப் வாய்க்காலுக்கு தண்ணீர் வருவதை உறுதி செய்ய வேண்டும்.
நல்லுார், மங்களூர் பகுதியில் 500 ஏக்கர் மக்காசேளம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு காப்பீடு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
ரவீந்திரன்: மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளது. ஒருபோக சாகுபடியே செய்ய முடியுமா என்பதே சந்தேகமாக உள்ளது. எனவே மாற்று பயிர்களை ஊக்குவிக்க வேண்டும், குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்ய வேளாண் அதிகாரிகள் அறிவுரை வழங்க வேண்டும்.
வேளாண் அதிகாரி: எள், உளுந்து போன்ற வறட்சி காலத்தில் பயிர் செய்யக்கூடிய பயிர்கள் உள்ளன. இனி வரும் காலங்களில் விவசாயிகளுக்கு சிபாரிசு செய்யப்படும்.
காவாலகுடி முருகானந்தம்: வெள்ளாறு படுகைகளில் 70அடி முதல் 150 அடி வரை உள்ள விவசாய போர்களில் நீர் மட்டம் குறைந்து வருகிறது. எனவே நீர் மட்டத்தை உயர்த்த சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் நீரை தேக்கி வைப்பதன் மூலம் செயல்படாத ஆழ்துளை கிணறுகள் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும். புவனகிரி தாலுகா ஆதனுார் இடையே நீர் ஆதாரத்தை பெருக்க கதவணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஶ்ரீமுஷ்ணம்,சேத்தியாத்தோப்பு பகுதிகளில் கால்நடைகள் திருடி வடலுார் சந்தையில் விற்பனை செய்யும் திருடர்கள் மீதும், திருட்டு கால்நடைகளை வாங்கும் வியாபாரிகள் மீதும் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் மோட்டார் வயர், ஸ்டாட்டர், பியூஸ் கேரியர் திருட்டு போவதையும் தடுக்க வேண்டும்.
திருப்பால்: தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் நிலத்தின் வில்லங்கம் கேட்டு விவசாய கடன் வழங்காமல் காலம் கடத்துகின்றனர். ஆனால் தேசிய வங்கிகளில் இதுபோன்று கேட்பதில்லை. எனவே வில்லங்கம் கேட்காமல் பயிர்கடனை வழங்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பதில் அளித்து பேசியதாவது:
விவசாயிகளுக்கு விதை நெல் மற்றும் உரம் தட்டுப்பாடின்றி கிடைத்திடவும், மழைநீரினை வீணாகாமல் ஏரி, குளங்களில் தேக்கி வைக்கவும், நீர்வரத்து பிரதான வாய்க்கால்கள் மற்றும் கிளை வாய்க்கால்களை துார் வாரிடவும், விவசாயிகளால் தெரிவிக்கப்படும் கோரிக்கைகளை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றார்.
