ADDED : பிப் 01, 2025 12:18 AM

பண்ருட்டி; பண்ருட்டி அருகே அங்குசெட்டிப் பாளையம் கிராமத்தில் சென்னை ஐகோர்ட் உத்திரவுபடி 2ம் நாளாக நேற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.
பண்ருட்டி அடுத்த அங்குச்செட்டிபாளையம் கிராமத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்க 6.84 சென்ட் நிலத்தை, தனியாரிடமிருந்து ஆதிதிராவிட நலத்துறை கையகப்படுத்தியது.
அந்த இடத்தில், தகுதி உள்ள நபர்களுக்கு பட்டா வழங்கவும், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சென்னை ஐகோர்ட், கடந்த 2024 ஜூன் 6ம் தேதி உத்தரவிட்டது.
அதையடுத்து, நேற்று முன்தினம் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி துவக்கினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் கடலுார் ஆர்.டி.ஒ.அபிநயா பேசுகையில், இங்கு வசிக்கும் தகுதியுள்ளவர்களுக்கு 67 பேருக்கு மனை பட்டா வழங்கப்படும்.
6.8 ஏக்கரில் 190 மனைகள் ஆதிதிராவிடர்களுக்கு உள்ளது. 67 பட்டா போக மீதமுள்ள மனைகள் தகுதியுள்ள நபர்களுக்கு மனையாக வழங்கப்படும் என்றார்.
இதனால் சமாதானம் ஏற்பட்டதையடுத்து மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி கடலுார் ஆர்.டி.ஒ., அபிநயா தலைமையில் நடந்தது.
நேற்று 2ம் நாளாக பண்ருட்டி தாசில்தார் ஆனந்த் தலைமையில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் அசோகன், மண்டல துணை தாசில்தார் கிருஷ்ணா, வி.ஏ.ஒ., சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் மேற்பார்வையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.