/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள்... அகற்றம்; வெயில் காலத்தில் பயணிகள் நிற்பதற்கு வாய்ப்பு
/
கடலுார் பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள்... அகற்றம்; வெயில் காலத்தில் பயணிகள் நிற்பதற்கு வாய்ப்பு
கடலுார் பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள்... அகற்றம்; வெயில் காலத்தில் பயணிகள் நிற்பதற்கு வாய்ப்பு
கடலுார் பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள்... அகற்றம்; வெயில் காலத்தில் பயணிகள் நிற்பதற்கு வாய்ப்பு
ADDED : மே 01, 2024 07:13 AM

கடலுார் : கடலுார் பஸ் நிலையத்தில் மாநகராட்சி அதிகாரிகள் காலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டபோது, மேயர் கணவர் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதியம் மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது.
கடலுார் பஸ் நிலையத்தில், இருந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றது. பஸ் நிலைய வளாகத்திற்குள் மாநகராட்சி சார்பில் 146 கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் தலைநகரான கடலுாரில் பஸ் நிலையத்தில் பயணிகளுக்காக கட்டப்பட்ட இடம் முழுவதும் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளது. குறிப்பாக, பயணிகள் நிற்கும் நடைபாதையை ஆக்கிரமித்து ஏராளாமான வியாபாரிகள் கடைகள் வைத்துள்ளனர். இதனால், பஸ் நிலையத்தில் பயணிகள் நடைபாதையில் ஒதுங்க கூட முடியாமல் பஸ்சிற்காக வெயிலில் காத்து கிடக்கும் அவல நிலை நீடித்து வருகிறது.
ஆக்கிரமிப்பு நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார் தெரிவித்தனர். அதன்பேரில், அதிகாரிகளும் அவ்வப்போது, சம்பிரதாயத்திற்காக ஆக்கிரமிப்பை அகற்றி விட்டுச் செல்வது வழக்கமாக இருந்தது. சில நாட்கள் கழித்து மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகள் புற்றீசல் போல் வளர்ந்து வருகிறது. இதனை அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. இதனால், ஆக்கிரமிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆர்.டி.ஓ., அபிநயா, பஸ் நிலையத்தில் திடீரென ஆய்வு செய்தார். அப்போது, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டுமென, வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து, இரண்டு நாட்களுக்குள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் எனவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர் காந்திராஜ் உத்தரவின்பேரில், நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் தலைமையில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அலுவலர்கள் நேற்று காலை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த மாநகராட்சி மேயர் கணவரும், தி.மு.க., மாநகர செயலாளருமான ராஜா, ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தடுத்து நிறுத்தினார்.
பின், அதிகாரிகளிடம் அவர் பேசுகையில், 'பஸ் நிலையத்தில் கடை வைத்துள்ளவர்கள் ஏற்கனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வட்டி மற்றும் தண்டல் கட்ட முடியாமல் தவிக்கின்றனர். வியாபாரம் இல்லாததால் குடும்பம் நடத்த முடியவில்லை. பஸ் நிலையமும் வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதால் வியாபாரிகள் வேதனையில் உள்ளனர்.
அதிகாரிகள், மேயருக்கு எதிராக செயல்படுவதுபோல் உள்ளது. இதனால், ஆக்கிரமிப்புக்களை அகற்றக்கூடாது' என்றார். இதையடுத்து,
ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை கைவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதையடுத்து மாலை பஸ் நிலையத்திற்கு வந்த அதிகாரிகள் மீண்டும் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இனியாவது ஆக்கிரமிப்பு அகற்றுவது என்பது பெயரளவில் இல்லாமல் நிரந்தரமாக அகற்ற தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.