ADDED : ஏப் 02, 2025 06:13 AM

பண்டைய தமிழர்கள் ரோமாபுரி, எகிப்து போன்ற நாடுகளுடன் கடல் கடந்த வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். வெளிநாட்டு வணிகத்தின் பலனாக, பன்னாட்டு வணிகத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் ரோமப் பணம் அதிகளவு கிடைத்தது.
இவற்றில் முத்து, வண்ணக்கல் மணிகள் வெளிநாட்டு பெண்களை மிகவும் கவர்ந்தவையாக இருந்தன. முத்து ஏற்றுமதிக்கு பாண்டிய நாடும், அழகிய கல்மணிகள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதிக்கு கொங்கு நாடும், கடலுாரும் புகழ்பெற்றவையாக விளங்கின.
தமிழகத்தில் தயாரிக்கும் வண்ணக்கல் மணிகளை வாங்குவதில் ரோமாபுரி பெண்கள் அதிகளவு ஆர்வம் காட்டியது அந்நாட்டின் பொருளாதாரத்தையே அசைத்துப்பார்க்கக் கூடிய அளவிற்கு இருந்தது என வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம், நொய்யல் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள கொடுமணல், வண்ணக்கல் மணிகள் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்றது. இங்கு 1985ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை நடந்த அகழாய்வுகளில் 8,000த்திற்கும் அதிகமான கல் மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 2,000 ஆண்டுகளுக்கு முன் கொங்கு மண்டலத்தில் வண்ணக்கல்மணிகள் தயாரிப்பில் முக்கிய பகுதியாக விளங்கியது என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கடலுார் அடுத்த குடிகாடு கிராமத்தில் நடந்த அகழாய்வில் கி.மு.,1 முதல் கி.பி.,2ம் நுாற்றாண்டுகளில் இவ்வூர் ரோமானியர்களுடன் நேரடி வணிகத்தொடர்பும், கல்மணிகள் தயாரிப்புக் கூடமாகவும் இருந்ததை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து வடலுார் தொல்லியல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் கூறுகையில், 'கடலுார் மாவட்டத்தில் மணிக்கொல்லை, சிலம்பிமங்கலம், பெரியப்பட்டு, திருச்சோபுரம், தியாகவல்லி, காரைக்காடு, குடிகாடு கிராமங்களில் வண்ணக்கல்மணிகள் தயாரிக்கும் ஆலைகள் இயங்கி வந்தது.
அங்கு தயாரிக்கப்பட்ட வண்ணக்கல் மணிகள் அரிக்கமேடு துறைமுகம் வழியாக ராமேஸ்வரம், சீனா, தாய்லாந்து, இந்தோனிஷியா, இலங்கை, ஜாவா போன்ற நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள் போட்டி போட்டு வாங்கினர்.
புதுச்சத்திரம் அடுத்த மணிக்கொல்லை கிராமத்தில் ஊதா, கருநீலம், பச்சை, மஞ்சள், கருப்பு, சிவப்பு, வெள்ளை ஆகிய நிறங்களை கொண்ட மணிகளும், கார்னீலியன் வகை மணிவகைகளும் இங்கு நடத்தப்பட்டுள்ள கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வூரில் துளையிடப்பட்ட மற்றும் துளையிடப்படாத மணிகளும் மூலகற்களும் அதிக அளவில் கிடைப்பதால் சங்க காலத்தில் மணிக்கொல்லை பகுதியில் மணிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்திருக்க வேண்டும் என்பதை அறியமுடிகிறது.
அந்த தொழிற்சாலைகளுக்கு தமிழகத்தின் மேற்கு பகுதியில் உள்ள சிவன்மலை, பெருமாள் மலை, வெங்கமேடு, காங்கேயம், எடப்பாடி, தாளமலை, எருமைப்பட்டி, படியூர் போன்ற ஊர்களில் பச்சை, ஊதா, கருநீலம், மஞ்சள், கிளி பச்சை, பளிங்கு நிறங்களில் மூலக்கற்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த மூலக்கற்களைப் பெற்ற கடலுார் பகுதி கொல்லர்கள் வண்ண கல்மணிகளாக உருமாற்றம் செய்தனர். 2,000 ஆண்டுகளுக்கு முன் கடலுார் பகுதியில் உருவான கல்மணிகள் எகிப்தில் பிறந்து, ரோம சாம்ராஜ்யத்தின் அரசியாக விளங்கிய பேரழகி கிளியோபாட்ராவையே மயக்கிய பெருமைக்குரியது.
மணிக்கொல்லை கிராமத்தில் அகழாய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது வரவேற்பை பெற்றுதுடன் தமிழர்களின் 2,000 ஆண்டு கால பெருமைகளை வெளிக்கொணரும்' என்றார்.