ADDED : மார் 24, 2026 11:06 PM

புதுச்சத்திரம்: சிதம்பரம் அடுத்த மணிக்கொல்லை கிராமத்தில், அகழாய்வு செய்யும் பணி துவங்கி நடந்து வருகிறது.
பண்டைய தமிழர்கள் ரோமாபுரி, எகிப்து போன்ற நாடுகளுடன் கடல் கடந்த வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். வெளிநாட்டு வணிகத்தின் பலனாக பன்னாட்டு வணிகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் ரோம பணம் அதிக அளவு கிடைத்தது.
இவற்றில் முத்து, வண்ண கல்மணிகள் வெளிநாட்டு பெண்களை மிகவும் கவர்ந்தவையாக இருந்தன. முத்து ஏற்றுமதிக்கு பாண்டியநாடு; அழகிய கல்மணிகள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதிக்கு கொங்குநாடு; மற்றும் கடலுார் ஆகியவை புகழ்பெற்றவையாக விளங்கின.
தமிழகத்தில் தயாரிக்கும் வண்ண கல்மணிகளை வாங்குவதில், ரோமாபுரி பெண்கள் அதிக அளவு ஆர்வம் காட்டியது, அந்நாட்டின் பொருளாதாரத்தை அசைத்து பார்க்கக் கூடிய அளவிற்கு இருந்தது என, வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம், நொய்யல் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள கொடுமணல், வண்ண கல்மணிகள் தயாரிப்பில் உலகப் புகழ் பெற்றது.
இங்கு கடந்த, 1985 ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை நடந்த அகழாய்வுகளில், 8 ஆயிரத்திற்கும் அதிகமான கல்மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த, 2000 ஆண்டுகளுக்கு முன், கொங்கு மண்டலம் வண்ண கல்மணிகள் தயாரிப்பில் முக்கிய பகுதியாக, விளங்கியது என்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கடலுார் அடுத்த குடிகாடு கிராமத்தில் நடந்த அகழாய்வில், கி.மு 1 முதல் கி.பி 2 ம் நுாற்றாண்டு வரை, ரோமானியர்கள் நேரடி வணிக தொடர்பும், கல்மணிகள் தயாரிப்பு கூடம் இருந்ததை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதில், கடலுார் மாவட்டத்தில் மணிக்கொல்லை, சிலம்பிமங்களம், பெரியப்பட்டு, திருச்சோபுரம், தியாகவல்லி, காரைக்காடு, குடிகாடு கிராமங்களில் வண்ண கல்மணிகள் தயாரிக்கும் ஆலைகள் இயங்கி வந்தன.
அங்கு தயாரிக்கப்பட்ட வண்ணக் கல்மணிகளை அரிக்கமேடு துறைமுகம் வழியாக, ராமேஸ்வரம், சீனா, தாய்லாந்து, இந்தோனேசியா இலங்கை போன்ற நாடுகளை சேர்ந்த வணிகர்கள் போட்டி போட்டு வாங்கினர்.
இதில் புதுச்சத்திரம் அடுத்த மணிக்கொல்லை கிராமத்தில் ஊதா, கருநீலம், பச்சை, மஞ்சள், கருப்பு, சிவப்பு, வெள்ளை ஆகிய நிறங்களை கொண்ட மணிகளும், கார்னீலியன் வகைகளும், இங்கு நடத்தப்பட்டுள்ள களஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மணிக்கொல்லையில் துளையிடப்பட்ட மற்றும் துளை இடப்படாத மணிகளும், மூல கற்களும் அதிக அளவில் கிடைப்பதால், சங்க காலத்தில் மணிக்கொல்லை பகுதியில் மணிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், இருந்திருக்க வேண்டும் என்பதை அறிய முடிகிறது.
அந்த தொழிற்சாலைகளுக்கு தமிழகத்தின் மேற்கு பகுதியில் உள்ள சிவன்மலை, பெருமாள் மலை, வெங்கமேடு, காங்கேயம், எடப்பாடி, தாளமலை, எருமைப்பட்டி, படியூர் போன்ற ஊர்களில் பச்சை, ஊதா, கருநீலம், மஞ்சள், கிளிபச்சை, பளிங்கு நிறங்களில் மூலக்கூற்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த மூலக்கற்களை பெற்ற கடலுார் பகுதி கொல்லர்கள், வண்ண கண்மணிகளாக உருமாற்றம் செய்தனர். கடந்த, 2000 ஆண்டுகளுக்கு முன் கடலுார் பகுதியில் உருவான கல்மணிகள், எகிப்தில் பிறந்துரோமசாம்ராஜ்யத்தின் அரசியாக விளங்கிய பேரழகி கிளியோபாட்ரா மயங்கிய பெருமைக்குரியவை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மணிக்கொல்லை பகுதியில் அகழாய்வு செய்ய, கடந்தாண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து கடந்த 7ம் தேதி தமிழகத்தில் 8 இடங்களில், அகழாய்வு செய்ய மத்திய தொல்லியல்துறை அனுமதி அளித்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக, சிதம்பரம் அடுத்த மணிக்கொல்லை கிராமத்தில், தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில், இணை இயக்குனர் பாக்கியலட்சுமி, அகழாய்வாளர்கள் சுபலட்சுமி, குமரவேல் ஆகியோர் மேற்பார்வையில் அகழாய்வு செய்யும் பணி துவங்கி நடந்து வருகிறது.
இது குறித்து தொல்லியல்துறை இணை இயக்குனர் சிவானந்தம் கூறுகையில், ' தற்போது மணிக்கொல்லையில் அகழ்வாய்வு பணிகள் கடந்த சில நாட்களாக தொடங்கி நடந்து வருகிறது. இதில் மஞ்சள், ஊதா, பழுப்பு, நீலம், கருப்பு, பச்சை குளித்த வண்ணங்களில் துளையிடப்பட்ட மற்றும் துளையிடப்படாத மணிகள், மூலக்கூறு கற்கள் கிடைக்கின்றன. இனிவரும் நாட்களில் மேலும் என்ன வகையான மணிகள் கிடைக்கும் என, ஆய்வு செய்து வருகிறோம்,' என்றார்.
