/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் புறவழிச்சாலையில் விரிவாக்கப் பணி மந்தம்: வடிகால் வாய்க்கால் பணியால் வியாபாரிகள் பாதிப்பு
/
விருத்தாசலம் புறவழிச்சாலையில் விரிவாக்கப் பணி மந்தம்: வடிகால் வாய்க்கால் பணியால் வியாபாரிகள் பாதிப்பு
விருத்தாசலம் புறவழிச்சாலையில் விரிவாக்கப் பணி மந்தம்: வடிகால் வாய்க்கால் பணியால் வியாபாரிகள் பாதிப்பு
விருத்தாசலம் புறவழிச்சாலையில் விரிவாக்கப் பணி மந்தம்: வடிகால் வாய்க்கால் பணியால் வியாபாரிகள் பாதிப்பு
ADDED : ஆக 12, 2024 05:28 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் புறவழிச்சாலை விரிவாக்கப் பணியில், மழைநீர் வடிகால் வாய்க்கால் பணி கிடப்பில் போடப்பட்டதால் வியாபாரிகள், பொது மக்கள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர்.
கடலுார் - திருச்சி, சேலம் - சிதம்பரம், சென்னை - ஜெயங்கொண்டம் மார்க்கத்தில், விருத்தாசலம் முக்கிய சந்திப்பு. இவ்வழியாக நெய்வேலி என்.எல்.சி., இந்தியா நிறுவனம், சிமென்ட், சர்க்கரை ஆலைகளுக்கு மூலப் பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் செல்கின்றன.
புதுச்சேரி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் பஸ் உள்ளிட்ட நெடுந்துார வாகனங்களும் செல்கின்றன.
இதனால், நகரில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில், கடலுார் - சேலம் மார்க்கமாக 2011ல் விருத்தாம்பிகை ஐ.டி.ஐ.,யில் இருந்து மணவாளநல்லுார் ஊராட்சி வரை 9 கி.மீ., தொலைவிற்கு புறவழிச்சாலை போடப்பட்டது. தொடர்ந்து, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கடலுார் மார்க்கத்தில், குப்பநத்தம் கிராம சாலையில் இருந்து உளுந்துார்பேட்டை மார்க்கமாக ஜங்ஷன் சாலையுடன் இணைத்து புதிய புறவழிச்சாலை போடப்பட்டது.
அதன்பின், கடலுார் - விருத்தாசலம் - சின்னசேலம் கூட்ரோடு வரை (சி.வி.எஸ்., சாலை) மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு, 275 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில், விருத்தாம்பிகை ஐ.டி.ஐ.,யில் இருந்து இரண்டு புறவழிச்சாலைகளும் பிரிவதால், அங்கு விபத்தை தவிர்க்கும் வகையில், ரூ.37 கோடியில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு, திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.
தற்போது, புதிய மேம்பாலத்தில் இருந்து சேலம் மார்க்கமாக, சித்தலுார் ரவுண்டானா வரை 4.3 கி.மீ., தொலைவிற்கு, 46 கோடி ரூபாயில் இருவழிச்சாலையை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடக்கிறது.
இதில், புதிதாக ஏழு கல்வெர்ட்டுகளும், ஆறு கல்வெர்ட்டுகள் அகலப்படுத்தும் பணியும் நடக்கிறது. இதற்காக சாலையின் இருபுறம் சிமென்ட் சிலாப்புடன் கூடிய வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டு வருகிறது.
லோக்சபா தேர்தல் காரணமாக தொய்வடைந்த பணிகள், தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ளது. ஆனால், இருபுறமும் மழைநீர் வடிகால் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாலையோர மின் கம்பங்கள் அகற்றப்படாமல் இருப்பதால், ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி விபத்து அபாயத்தில் உள்ளது.
மேலும் கடைகளின் முகப்பில் வடிகால் பணி நிறைவடையாமல் இருப்பதால், மாதக்கணக்கில் கடைகளை திறக்க முடியாமல் வியாபாரிகள் அவதியடைந்து வருகின்றனர்.
சிலர் கடைகளை காலி செய்துவிட்டு சென்றுள்ளனர். புறவழிச்சாலையில் பரபரப்பாக இயங்கிய கோ.பொன்னேரி ரவுண்டானா, தற்போது முடங்கிக் கிடப்பதால் பொது மக்கள், வியாபாரிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர்.
எனவே, விருத்தாசலம் புறவழிச்சாலையில் நடந்து வரும் விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வடிகால் பணிக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை இடமாற்றம் செய்து, வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்காமல் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் வாயக்கால் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.