ADDED : ஜூன் 29, 2026 10:49 PM

கிள்ளை: கிள்ளை மாரியம்மன் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் குழந்தை உட்பட 20 பேர் காயமடைந்தனர்.
கடலுார் மாவட்டம், கிள்ளை, குச்சிபாளையம் மாரியம்மன் கோவிலில் நேற்று மாலை தீமிதி திருவிழா நடந்தது. இதற்காக நாட்டு வெடிகள் மற்றும் பட்டாசுகள் கோவிலில் வைத்திருந்தனர். தீமிதி விழா முடிந்து, இரவு 8:30 மணிக்கு பக்தர்கள் கோவில் மாவிளக்கு போட்டனர். அப்போது, ஒருவர், மாவிளக்கு திரியை ஏற்றிவிட்டு வத்திகுச்சியை கீழே வீசினார். அப்போது, வத்திக்குச்சி, அருகில் இருந்த பட்டாசு மீது விழுந்தது. இதனால் அடுத்தடுத்து பட்டாசுகள் வெடித்து சிதறியதால் பக்தர்கள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு நிலவியது. பட்டாசுகள் வெடித்ததில், குழந்தை உட்பட 20 பக்தர்கள் காயமடைந்தனர்.
கோவில் வளாகம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. உடன், அருகில் இருந்த கிராம மக்கள், காயமடைந்த 20 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிதம்பரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். கிள்ளை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
