/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அடிமாட்டு விலைக்கு நெல் கொள்முதல்; கடலுார் மாவட்ட விவசாயிகள் பாதிப்பு
/
அடிமாட்டு விலைக்கு நெல் கொள்முதல்; கடலுார் மாவட்ட விவசாயிகள் பாதிப்பு
அடிமாட்டு விலைக்கு நெல் கொள்முதல்; கடலுார் மாவட்ட விவசாயிகள் பாதிப்பு
அடிமாட்டு விலைக்கு நெல் கொள்முதல்; கடலுார் மாவட்ட விவசாயிகள் பாதிப்பு
ADDED : ஜன 22, 2025 07:49 AM
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லை, வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு வாங்குவதால், விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர்.
கடலுார் மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு கனமழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உற்பத்தி குறைவாக இருந்தால் விலை கூடும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.
ஆனால், நெல் விலை அதற்கு நேர்மாறாக அமைந்தது. அறுவடை செய்யும் இடத்திற்கே சென்று நெல் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், நெல் தரம் குறைவாக இருப்பதாக கூறி, கடந்த ஆண்டைவிட குறைவான விலைக்கு கொள்முதல் செய்கின்றனர்.
உதாரணமாக, பி.பி.டி., நெல் கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் 2,250 ரூபாய்க்கு விலை போனது, இந்த ஆண்டு 1875 ரூபாயாக குறைந்துள்ளது. அதே போல, ஏ.டி.டி.37 குண்டு ரகம் கடந்த ஆண்டு 1500 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த ஆண்டு 1,375 ரூபாய்க்கு விலை போகிறது.
ஆனால் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு குவிண்டால் 2,450 ரூபாய்க்கும், குண்டு ரகம் 2,405 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.
மூட்டை ஒன்றுக்கு 600 ரூபாய் அதிகம் இருப்பதால் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர். அதனால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கொள்முதல் நிலையங்களும் அதிகரித்துள்ளன.
மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்கள் காவிரி டெல்டா பகுதிகளாக இருப்பதால் சம்பா பருவ நெல் அறுவடை துவங்கியுள்ளது.
விவசாயிகள் கோரிக்கைகளின் பேரில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் 34 இடங்களிலும், ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் 42, விருத்தாசலம் -32, சிதம்பரம் -25, திட்டக்குடி- 33, புவனகிரி வட்டத்தில் 24, குறிஞ்சிப்பாடி -9, வேப்பூர் - 12 இடங்களிலும், கடலுார் வட்டத்தில் 15, பண்ருட்டி வட்டத்தில் 9 இடங்கள் என, மொத்தம் 235 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, கொள்முதல் செய்யப்படுகிறது.
நெல் கொள்முதல் செய்யும் வியாபாரிகளிடம் கேட்டபோது, '' கடலுார் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மழை வெள்ளத்தால் நெல்லின் தரம் குறைந்துள்ளது. அதனால் விலை போகவில்லை. வரும் காலத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லுக்கு கூடுதல் விலை கிடைக்க வாய்ப்புள்ளது' என்றார்.