/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகள்... கவலை; 50,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
/
காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகள்... கவலை; 50,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகள்... கவலை; 50,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகள்... கவலை; 50,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
ADDED : டிச 14, 2024 07:11 AM

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதியில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. 50 ஆயிரம் ஏக்கர் சம்பா நெல் பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை, வங்கக் கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. நேற்று பகல் மற்றும் இரவு நேரங்களில் இடைவிடாமல் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.
இதனால் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். டெல்டா உள்ளிட்ட மேல் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்துள்ளதால், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
டெல்டா பகுதியில் உள்ள வெள்ளியங்கால் ஓடையில் 22,000 கன அடி, மணவாய்க்காலில் 12,000 கன அடி, கொள்ளிடம் ஆற்றில் 10,000 கன அடி வீதம் தண்ணீர் செல்கிறது.
வீராணம் ஏரியில் நீர் பிடிப்பு பகுதியான கருவாட்டு ஓடை, நாரை ஏரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஏரியின் மேற்கு கரையோர கிராமங்களான மாமங்கலம், மேல்பாதி, கொண்டசமுத்திரம், அகரபுத்துார், சித்தமல்லி, கருணாகரநல்லுார், கண்டமங்கலம், குருங்குடி, உள்ளிட்ட பல கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது.
வெள்ளியங்கால் ஓடையில் வெள்ளப் பெருக்கு காரணமாக கொளக்குடி, சர்வராஜன்பேட்டை, திருநாரையூர், சிறகிழந்தநல்லுார், நந்திமங்கலம், குமராட்சி, வாழைத்தோப்பு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனை வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டு தண்ணீர் வடிய நடவடிக்கை மேற்கொண்டனர். டெல்டாவில் சம்பா நெல் பயிர்கள் தண்டு உருண்டு சூல் பயிராகவும், சில பகுதிகளில் பூ வெளியில் வந்த வண்ணம் உள்ளது. சம்பா நெல் வயல்களில் தண்ணீர் சூழ்ந்து வடியாமல் தேங்கி பயிர்கள் மூழ்கியுள்ளது.
குச்சூர், மோவூர், ஆழங்காத்தான், எடையார், திருநாரையூர் மற்றும் குமராட்சி பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் டெல்டா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மழை மேலும் சில நாட்கள் நீடித்தால் சம்பா சாகுபடியில் பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. விடிய விடிய கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் வெளியில் வர முடியாமல் வீட்டில் முடங்கியுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதித்தது.