ADDED : ஜன 13, 2026 05:33 AM

கடலுார்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கடலுார் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலுார் அடுத்த கொடுக்கம்பாளையம் ஊராட்சி மலையடிக்குப்பம், வெ.பெத்தாங்குப்பம், கொடுக்கம்பாளையம், கீரப்பாளையம், கட்டாரச்சாவடி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் பயிர்செய்து அனுபவித்த இடத்திற்கு தரிசு நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பட்டா வழங்க வேண்டும், சட்ட விரோதமாக 9 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த முந்திரி மரங்களை அழித்த வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அதற்குரிய நஷ்டஈடு வழங்க வேண்டும், காலணி தொழிற்சாலையை வேறு இடத்தில் அமைக்க வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் கருப்பையன், மாவட்ட செயலாளர் பழனிவேல், விவசாய சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் சரவணன், மாதர் சங்கம் அம்சாயாள், மா.கம்யூ., மாநகர செயலாளர் அமர்நாத் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து டி.ஆர்.ஓ., புண்ணியகோட்டியிடம் மனு அளித்தனர்.
